ப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் (George Floyd) கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சௌவின் (Derek Chauvin) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால், அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தண்டனை விவரம் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரானஜோர்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார். பலரும் பார்க்கும் வண்ணம் காவலர்களாலேயே அந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. வெள்ளை இன காவல் அதிகாரியான டெரக் சௌவின் ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது. இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

சரியாக 9 நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் தனது காலை வைத்து டெரக் சௌவின் அழுத்தியது வீடியோவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் காவல் அதிகாரி டெரக் சௌவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்னிபோலிஸ் நீதிமன்றம் இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.

மூன்று வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த அமர்வில் கறுப்பினம், வெள்ளையினம் எனக் கலவையாக நீதிபதிகள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

டெரக் சௌவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

46 வயதான டெரக் சௌவின், காவல்துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இறுகிய முகத்துடன், கைகளில் பூட்டப்பட்ட விலங்குடன் மவுனமாக நீதிமன்றத்தில் வெளியேறினார். தீர்ப்புக்காக வெளியே காத்திருந்த அனைவரும் வெற்றி, வெற்றி எனக் கோஷமிட்டனர்.

தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இந்தத் தீர்ப்பால் மாற்றங்கள் வரப்போவதில்லை. ஆனால் கடவுளே நீதி கிடைத்திருக்கிறது. இது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. டெரக் சௌவின் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது’ என்றார். துணை அதிபர் கமலா ஹாரிஸ், ‘இது அமெரிக்க வரலாற்றில் நீதி நிலைநிறுத்தப்பட்ட நாள்’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு குறித்து ஜோர்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் ஃப்ளாய்ட் (Philonise Floyd) கூறியதாவது:
“இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜோர்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்து விடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.