கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும்.மக்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது.

இந்தச் சவாலைச் சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்உலக சுகாதார நிறுவனம் (WHO) தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்க உள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதலில் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளது.முன்னணி சுகாதார அதிகாரிகள், கொவிட் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது கட்டம் வழங்கப்படும்.

எஞ்சிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி உற்பத்தி செய்யும் உலகில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி 200,000 ஏப்ரல் மாதம் இறுதியிலும் 400,000 தடுப்பூசிகள் மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலும் 1,200,000 தடுப்பூசிகள் ஜூலை மாதத்திலும் கொண்டு வரப்படும்.13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அன்பளிப்பாக சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 600,000 செனோபாம் தடுப்பூசிகள் – எதிர்வரும் சில வாரங்களில், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அனுமதி கிடைக்கப்பெற்றதும் நாட்டு மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக அரச ஔடத கூட்டுத்தாபனம் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை கொண்டு வருவதற்கு தேவையான ஆரம்ப உடன்படிக்கைகளில் தற்போது கைத்சாத்திட்டுள்ளதுடன், அவற்றை மிக விரைவில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சுகாதார வழிகாட்டல்களை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றுவதே – கொவிட் 19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான இன்றியமையாத செயற்பாடாகும்” என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO தலைவர் நேற்று ஜெனிவாவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.உரிய முறையில் முகக் கவசங்களை அணிவது,சவர்க்காரம் அல்லது தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுதல்,சமூக இடைவெளியைப் பேணுதல்,தேவையற்ற பயணங்கள் மற்றும் விழாக்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருத்தல் என்பன தவிர்க்க முடியது பின்பற்றப்பட வேண்டியவையாகும்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றும் ஒழுக்கப்பண்பு உடைய சமூக நடத்தைகளே – நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்குச் சிறந்த தீர்வாகும் என்பதே அனேக நாடுகளிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சிறந்த பட்டறிவாகும்.கொவிட் 19 பிரச்சினைக்குத் தீர்வாகச் சில காலம் நாட்டை மூடி வைக்க வேண்டும் எனவும் சிலர் எண்ணுகின்றனர்.

ஆரம்ப காலகட்டங்களில் அத்தகைய ஒரு நடைமுறையின் மூலம் திருப்தியான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றிருத்தபோதும்,தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்கு நாட்டை மூடி வைப்பதானது – மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.பொருளாதாரச் செயற்பாடுகளை முற்றாக முடக்கிவிடக்கூடிய வகையில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளால் தொடர்ந்து செயற்படுத்த முடியாது ஒரு விடயம் ஆகும்

.எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ஓர் ஒழுங்குமுறையற்ற – நிரந்தரமல்லாத – வருமானம் பெறும் வாழ்வாதார வழிகளிலேயே தங்கியுள்ளனர்.எனவே, அரசாங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களும், நாட்டினதும் தம்முடையதும் நலனைக் கருத்திற்கொண்டு தமது பொறுப்புக்களை உணர்ந்து தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.