பல்வேறு வெளிநாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்களை திரட்டிக் கொள்வதற்காக அல்லது கரிசனைக்குரிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் பரப்புரைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள் இலங்கையில் செயற்படுகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சில நாடுகளின், செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலேயெ இந்த புலனாய்வு அமைப்புகளின் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இலங்கை இருப்பதால், அதனை பிராந்திய உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தலுக்கு சில நாடுகளால் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதாகவும், கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் இராஜதந்திர கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என்று நம்பப்படுவதாகவும் நன்கு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் விடுதலைப் புலிகளுடன் போர் இடம்பெற்ற காலத்திலும் வெளிநாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் செயற்பட்டனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிடுகையில், இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் இருக்கும் வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகளை, கண்டறிவது கடினம் என்றும், வெளிநாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகள் செயல்படுவது இலங்கையில் மட்டுமன்றி வேறு நாடுகளிலும் அவ்வாறு நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.