தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா எம்.பியினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை முன்நிறுத்தியதான உயர் மட்ட கலந்துரையாடலும், கள விஜயமும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது அக்கரைப்பற்று பிரதேச உள்ளக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய பொதுப்போக்குவரத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் எண்ணக்கருவில் உருவாகும் மீனோடைக்கட்டு-அக்கரைப்பற்று மாற்று வழி கார்பட் வீதி நிர்மாணம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் , அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியில் நிறுவப்பட்டுள்ள அரிசி ஆலை மற்றும் மர ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல்களில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஐ.அஹமத் சஜீர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், மாநகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.