டெல்டா திரிபு வைரஸ் அண்மை நாட்களாக நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்களை பலியெடுக்கத் தொடங்கிவிட்டது.இது இப்படியே போனால் வரும் ஒக்டோபர் மாத தொடக்கமளவில் நாளொன்றுக்கு 220 பேர்களாவது இறக்கும் ஒரு நிலைமை வரலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சுயாதீன நிபுணர் குழுவின் அவதானிப்பில் தெரிவிக்கப்பட்டிருருக்கிறது. நாளொன்றுக்கு 100க்கும் குறைவானவர்களை கொல்லக் கொடுப்பது என்பது இச்சிறிய தீவுக்கு ஒரு புதிய அனுபவம் அல்ல. 2009ஆம் ஆண்டு ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100 – 150 உயிர்களை கொல்லக்கொடுத்த ஒரு நாடு இது.யுத்த வெற்றிக்காக எத்தனை உயிர்களையும் கொல்லக் கொடுக்கலாம் என்ற ஒரு கெட்ட முன்னுதாரணம் இந்த நாட்டில் ஏற்கெனவே உண்டு.

அந்த யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ஒரு குடும்பம்தான் இப்பொழுதும் நாட்டை நிர்வகிக்கிறது.அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த அதே படைத்தரப்புத்தான் இப்பொழுது நாட்டின் பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. வைரஸ் தொற்றுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகளிலும் அதே படைத்தரப்புதான் முன்னணியில் நிற்கின்றது. எனவே டெல்டா வைரஸின் தாக்கத்தால் நாளொன்றுக்கு சராசரியாக நூற்றுக்கும் அதிகமானவர்களை கொல்லக்கொடுப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஓர் அசாதாரணமான விவகாரம் அல்ல.

இதில் ஒரே ஒரு வித்தியாசம்.இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் சாதாரண தமிழ் பொதுஜனங்கள். இப்பொழுது டெல்டா திரிபு வைரஸால் கொல்லப்படுபவர்கள் தனியே ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மூவினத்தைச் சேர்ந்தவர்கள். அதிகமானவர்கள் சிங்கள மக்கள். இந்த ஒரு வித்தியாசத்தை தவிர இறப்புக்கள் இழப்புக்களைத் தாண்டி ஒரு வெற்றியை ஈட்டுவது என்பது இந்த அரசாங்கத்துக்கு பழகிப்போன ஒரு விடயம். இந்த அனுபவத்துக்கூடாகவே அரசாங்கம் டெல்டா திரிபு வைரசையும் அணுகும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் நாட்டின் பல்வேறு துறைகளையும் அரசாங்கம் படைமயப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சுகாதார கட்டமைப்பின் மீதான படைத்தரப்பின் மேலாண்மை வெளிப்படையாக தெரிகிறது.

இலங்கைத்தீவின் சுகாதார கட்டமைப்பின் தரம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட பாராட்டுக்குரிய ஒரு சுகாதார கட்டமைப்பானது படைத்தரப்பின் மேலாண்மைக்குட்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டிருப்பது என்பது யுத்த வெற்றியின் விளைவுகளில் ஒன்றுதான்.

இலங்கைத்தீவில் அதிக ஆளணியைக் கொண்ட அதிக வளங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு என்று பார்த்தால் அது படைக் கட்டமைப்புதான். நாட்டின் தலைப்பேறானவை அனைத்தையும் கொடுத்து கட்டி வளர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பு அது.இலங்கை தீவின் அரச உபகரணங்களில் அதிகம் வினைத்திறன் மிக்க ஒரு கட்டமைப்பும் அது. எல்லாவற்றையும் விட முக்கியமாக நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக எழுச்சி பெற்றிருக்கும் ஒரு கட்டமைப்பும் அது. எனவே வைரஸ் தொற்றுக்கு எதிராக படைத் தரப்பை முன்னிலைப்படுத்திய பொழுது அதற்கு பெருமளவுக்கு எதிர்ப்பு எழவில்லை. அதோடு முதலாவது வைரஸ் தொற்று அலைக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றத்தையும் காட்டியிருந்தது.

குறிப்பாக அண்மை மாதங்களாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு படைநடவடிக்கை போலவே முன்னெடுத்து வருகிறது.இரவுபகலாக தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.படைத்தரப்புதான் அந்த நடவடிக்கையை முழுவதுமாக கையாண்டு வருகிறது. இதுவிடயத்தில் அரசாங்கம் ஒரு குறுந்தூர ஓட்டப் பந்தய வீரனின் மனநிலையோடு படைத்தனமாக செயற்படுகிறது.ஆனால் மூன்றாவது தொற்றலையை அதாவது டெல்டா திரிபை கட்டுப்படுத்துவதில் படைத்தரப்பு எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறத்தவறிவிட்டதாக இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியிலேயே விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன.

ஏனெனில் வைரஸின் தாக்கத்தால் பொருளாதாரம் மேலும் சரியத் தொடங்கி விட்டது. பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. சாதாரண ஜனங்கள் தடுப்பூசிக்காகவும் நீண்ட கியூவில் நிற்கிறார்கள். சமையல் எரிவாயுவிற்காகவும் நீண்ட கியூவில் நிற்கிறார்கள்.மிக விரைவில் நாடு ஒக்சிசனுக்காகவும் தவிக்கும் ஒரு நிலைவரலாம் என்று துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டது. வழமையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதற்குரிய ஒக்சிசனை அனுராதபுரத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும்.இப்பொழுது அதுவும் போதாமல் கொழும்புக்குப் போக வேண்டிய ஒரு நிலைமை வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் covid-19 தடுப்பு மையங்களும் சிறப்பு மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. யுத்தகாலத்தைப் போலவே இது தொடர்பான செய்திகள் தணிக்கை செய்யப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது.

அதாவது வைரஸ் தொற்றின் பொருளாதார எதிர்விளைவுகள் சாதாரண சிங்கள மக்களை தாக்கத் தொடங்கிவிட்டன. ஒருபுறம் டெல்டா திரிபின் மரண அச்சுறுத்தல்.இன்னொருபுறம் விலையேற்றம்.இதனால் சாதாரண சிங்கள மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியும் கோபமும் அடைந்திருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியன் எச்சரித்திருப்பதுபோல ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படுமாக இருந்தால் நாட்டின் பிரதான வருமான வழிகளில் ஒன்றாக காணப்படும் ஆடை உற்பத்தித்துறை நெருக்கடிக்குள்ளாகும்.வைரஸ் தொற்றினால் ஏற்கனவே உல்லாசப் பயணத்துறை நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.எனவே பொருளாதாரம் மேலும் சீரழியக்கூடிய வாய்ப்புகளே அதிகம் தெரிகின்றன.

இவை காரணமாக அரசாங்கம் ஏதோ ஒரு சுதாகரிப்புக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது என்பதே மெய் நிலையாகும். பசில் ராஜபக்சவை  களமிறக்கியது அந்த நோக்கத்தோடுதான்.அண்மை வாரங்களாக கிடைக்கும் செய்திகளின்படி அவர் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக தெரிகிறது. திருகோணமலை துறைமுகத்தை அண்டிய காணிகளை குவாட் நாடுகளுக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதுதொடர்பில் அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.இது முதலாவது.

இரண்டாவது அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் ஜி.எல்.பீரிசுக்கும் சுமந்திரனுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தை என்று ஒரு மூத்த ஊடகவியலாளர் வர்ணித்தார்.ஜி.எல்.பீரிசை சுமந்திரன் சந்தித்தமை என்பது எதிர்காலத்தில் கூட்டமைப்போடு அரசாங்கம் ஏதோ ஒரு வகையிலான பேச்சுவார்த்தைக்கு போக தயாராகி வருவதை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.பசில் ராஜபக்சவின் சம்மதத்தோடுதான் இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசாங்கம் கூட்டமைப்போடு பேச விளைகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இது இரண்டாவது.

மூன்றாவது,ஜெனிவா விடயத்திலும் அரசாங்கம் சில சுதாகரிப்புக்களை செய்யலாம் என்பதைத்தான் கடந்த 26ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் ஐநா வை நோக்கி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் ஏதோ சில சுதாகரிப்புகளை செய்யப்போகிறது என்று மட்டும் தெரிகிறது.அவ்வாறு அரசாங்கம் மேற்கை நோக்கி சில வழிகளைத் திறக்கும் பொழுது அதை மேற்கு நாடுகளும் பயன்படுத்தும்.ஏனென்றால் இந்த அரசாங்கத்தை மேலும் அழுத்தினால் அது சீனாவை நோக்கி மேலும் நெருங்கி செல்லும் என்ற அச்சம் மேற்கு நாடுகளுக்கும் உண்டு இந்தியாவுக்கும் உண்டு.எனவே இந்த அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் எந்த ஒரு அழுத்தமும் அரசாங்கத்தை சீனாவை நோக்கி தள்ளுவதாக இருக்காமல் மேற்கையும் இந்தியாவையும் நோக்கி வளைத்தெடுப்பதாகவே இருக்கவேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இரண்டு தரப்புகளிடமும் உண்டு.ஒரு ஆட்சி மாற்றத்துக்கான சாதகமான நிலைமைகள் வரும்வரையிலும் இப்போது இருப்பதை விடவும் இந்த அரசாங்கம் மேலும் அதிக அளவில் சீனாவை நோக்கி செல்வதை தடுக்க வேண்டும் என்று மேற்கும் இந்தியாவும் சிந்திக்கக்கூடும்.

எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் அரசாங்கத்தின் மேற்கு நோக்கிய சுதாகரிப்புக்களை மேற்கு நாடுகள் பற்றிக்கொள்ளும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன.எனினும் இந்த சுதாகரிப்புக்களினாலேயே வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கலாமா?

வைரஸ் பெருக்கத்தை தடுப்பது என்றால் அரசாங்கத்துக்கு இரண்டே இரண்டு பிரதான தெரிவுகள்தான் உண்டு. ஒன்று இப்போது இருப்பதை விட மேலும் அதிகரித்த அளவில் ராணுவத்தனமாக சுகாதார நடவடிக்கைகளை முடுக்கி விடுவது. இரண்டாவது சுகாதாரக் கட்டமைப்பை படைத்தரப்பின் மேலாண்மையில் இருந்து விடுவித்து சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதோடு வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆகக் கூடிய பட்சம் மக்கள்மயப்படுத்துவது.

இதில் முதலாவது தெரிவுக்குரிய வாய்ப்புகள் அதாவது சுகாதார நடவடிக்கைகளை மேலும் படை மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் இடையிலான நெருக்கம் அதிகம் நிச்சயத்தன்மை மிக்கது. ஒன்று மற்றதில் நிரந்தரமாகத் தங்கியிருப்பது.எனவே போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்களோ அப்படியே டெல்டா திரிபையும் முறியடிப்பது என்று முடிவெடுத்து மேலும் அதிகரித்த அளவில் படைத்தனமாக வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடக்கூடிய நிலைமைகளே அதிகம் தெரிகின்றன.மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் ஒரு படைநடவடிக்கை போல டெல்டா திரிபுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதைத்தான் தடுப்பூசி ஏற்றும் நடைமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால் வைரசுக்கு எதிரான போரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரும் ஒன்றல்ல என்பதனையே கடந்த சுமார் 20 மாதங்கள் நிரூபித்திருக்கின்றன.எனவே வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகம் மக்கள் மயப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழத் தொடங்கிவிட்டன.மருத்துவத்துறை எனப்படுவது ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையில் அதிக காலம் பயிலப்ப்படுவது.அதற்கு அதிகரித்த பொறுப்புணர்ச்சியும் பயிற்சியும் பட்டறிவும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு துறையை படைத்தரப்பு மேலாண்மை செய்வது என்பது பொருத்தமானது அல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. நெருக்கடிகளின்போதும் அனர்த்த காலங்களிலும் படைத்தரப்பை மீட்பு நடவடிக்கைக்களிலும் துயர் துடைப்பு நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவது வேறு.மருத்துவத்துறைசார் நடவடிக்கைகளை படைத்தரப்பு முகாமை செய்வது என்பது வேறு. ஆனால் இலங்கைத் தீவில் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பின் மேலாண்மை அளவுக்கு மிஞ்சி அதிகரித்திருப்பதாக மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களும் ஏனைய துறைசார் நிபுணர்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறார்கள். வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போரைப் போல முன்னெடுப்பது தவறு என்பதனை இந்த நாடு உணர்வதற்கு மேலும் அதிக உயிர்விலை கொடுக்க வேண்டியிருக்குமா?