ஆப்கானிஸ்தான் மண்ணில் உள்ள பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள உலோகங்களை வெட்டி எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் தலைமையிலான அரசுகள் செயல்பட்ட போதே அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை சீனா மேற்கொண்டு வந்தது.குறிப்பாக, சுரங்கம், தொலைத்தொடர்பு, சாலை கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து வந்தது. தாமிர சுரங்கம், எண்ணெய் வயல் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர, ஆஸ்பத்திரிகள், நீர் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றையும் உருவாக்கி கொடுத்தது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் நீட்டிக்க விரும்புகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு முறைப்படி அரசு அமைந்த பிறகு, தலீபான்களை அங்கீகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சீனா நேற்று முன்தினம் தெரிவித்தது. தலீபான் ஆட்சியை சீனா அங்கீகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தான், உலோக வளம் நிரம்பியது. மிகவும் அரிதான, விலை உயர்ந்த உலோகங்கள் அந்த மண்ணில் உள்ளன.

இந்த உலோகங்கள், ஐபோன், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், கம்ப்யூட்டர், டி.வி.டி. பிளேயர், நீராவி எந்திரம், சூப்பர் கண்டக்டர்ஸ், டெலிவிஷன், மானிட்டர்கள், லேசர், கண்ணாடி இழைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தக்கூடியவை.

இந்த உலோகங்கள், 1 லட்சம் கோடி டாலர் முதல் 3 லட்சம் கோடி டாலர்வரை மதிப்புடையவை என்று அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் முன்னாள் தூதர் அகமதுஷா கடாவாசை தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம் கோடி முதல் ரூ.225 லட்சம் கோடி டாலர்வரை இருக்கும். தலீபான் ஆட்சியுடன் நெருக்கமாக இருந்து இந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் திட்டங்களை பெற்று சம்பாதிக்கலாம் என்று சீனா கருதுவது தெரிய வந்துள்ளது.