ரிஷாட் பதியுதீனின் மாமனார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று (27) நிராகரித்துள்ளது.

சந்தேக நபருக்கு கொரோன தொற்று இருந்தால் அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான அலி இப்ராகிம் சைபு கிதார் முகமது சிஹாப்தீன் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாக இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்தார்.

தனது வாடிக்கையாளருக்கு கொரோனா நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி பிணை வழங்க முடியாது என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம், சந்தேக நபருக்கு தேவையான சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.