நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடலின்போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நாடு முடக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.