அசாம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்ரா ஆற்றில் நிமடி காட் என்ற படகு குழாமில் இருந்து நேற்று ‘மா கமலா’ என்ற எந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120-க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

படகு புறப்படும் நேரம் நெருங்கியபோது, மற்றொரு படகு வந்தது. அதை நிறுத்த இடம் அளிப்பதற்காக, ‘மா கமலா’ படகு சற்று நகர்ந்தது. அப்போது 2 படகுகளும் மோதிக்கொண்டன. ‘மா கமலா’ படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

அதனால் படகில் இருந்த 120 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். பெரும்பாலானோரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை மீட்புப்பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் மீட்புப் பணியில் ராணுவம் இன்று இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு பெண் ஆசிரியை உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மூன்று பேர் ஜோர்ஹட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதி 70 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. படகில் கார்கள், ஆட்டோக்கள் ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன. அவையும் ஆற்றுக்குள் விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப்பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டுள்ளதாகவும், நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, பணியில் அலட்சியம் காட்டியதாக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.