தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை தூண்ட “சம்பவம்” வேண்டும். ஆனால், அதில் சிங்கள பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே மெது இலக்கு (Soft Target) நாதியற்ற தமிழர்கள்தான். இந்த உறங்கும் உண்மையை கண்டு பிடிக்க “ரொக்கெட் விஞ்ஞானிகள்” தேவையா என்ன?

கொழும்பு பேராயர் ரஞ்சித் மெல்கம், “ஈஸ்டர் ஞாயிறு 4/21 சஹாரான் கும்பல் தாக்குதல்” தொடர்பில், இரண்டு வருடமாகியும் நியாயம் நிலைநாட்ட படவில்லை என்றும், இதில் ஒளிந்து நிற்கும் உண்மையை அரசு மறைத்து வருகிறது என்று பொருள் படவும் கூறுகிறார்.அரசாங்கம் சர்வதேசத்தை நாடுமானால், தாமும் சர்வதேசத்தை நாடுவோம் என்கிறார்.

சர்வதேசத்தை நாடுவது பற்றி இரண்டாம் முறை கூறியுள்ளார். குறிப்பாக ஐநா மனித உரிமை ஆணையகத்தில், இதுபற்றி பேச தமது ஜெனீவா தொடர்பாளர்கள் தயார் என்றும் பேராயர் கூறுகிறார்.

பிரதமர் மகிந்தவும், வெளிவிவகார அமைச்சர் பீரிசும் ஏதோ “வெண்டிக்காய் பீட்சா” வாங்க இத்தாலி போகிறார்கள்.

அதன்போது பாப்பரசரை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டு பார்க்க இருந்தவர்கள், இப்போது, பேராயரின் மிரட்டலுக்கு அஞ்சி, பாப்பரசரை சந்திக்க எண்ணமில்லை என்று கூறிவிட்டார்கள். கடந்த தேர்தலின் போது இன்றைய ஆளும் கட்சியை கடுமையாக ஆதரித்தவர், என்பதால் எனக்கு பேராயர் மீது கொஞ்சம் அதிருப்தி இருந்தது.ஷ

ஆனால், இவர் கத்தோலிக்க மக்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வேண்டி உறுதியாக இருப்பது கண்டு நான் இன்று மகிழ்கிறேன்.
இங்கே எனக்கு விளங்குகின்ற, “உறங்கும் உண்மை” ஒன்றை தர்க்கரீதியாக வெளியே சொல்ல விரும்புகிறேன்.
290 பேர் கொல்லப்பட்டு, 500 பேர் காயமடைந்த 4/21 சஹாரான் கும்பல் தாக்குதலில் இறந்த, காயமடைந்தோரில் மிக பெரும்பான்மையோர் மதரீதியாக கத்தோலிக்கர்கள்.

எவரதும் கவனத்தில் பெரிதும் வராத உண்மை ஒன்று உள்ளது. இறந்த காயமடைந்தோரில் பெரும்பான்மையோர் தமிழர்கள்.
எனது வாக்காளர்கள் நிறைந்த கொழும்பு கொட்டாஞ்சேனை அந்தோனியார் தேவாலயத்தில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டோர் மிகப்பெரும்பாலோர் தமிழ் கத்தோலிக்கர்கள்/கிறிஸ்தவர்கள்.

நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயத்தில் கொல்லப்பட்டோரும் கணிசமாக சிங்களம் பேசும் முன்னாள் தமிழர்கள்தான்.
ஆனால், நல்லவேளை இவர்களுக்கான நீதி இனரீதியாக இல்லாமல் மத ரீதியாக இன்று கோரப்படுகிறது. இனரீதியாக நீதி கோரி இருந்தால், இன்று ஈஸ்டர் தாக்குதல் சம்பவம், குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கும்.அது மட்டுமல்ல, கொல்லப்பட்ட தமிழர் பற்றி ஐநாவுக்கு யார் கடிதம் எழுதுவது என்று தமிழ் கட்சிகள் இன்னமும் அடிபட்டு கொண்டிருப்பார்கள்.

இங்கே கவனிக்கப்பட வேண்டியது, தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், ஒரு மெது இலக்கை (Soft Target) தேடித்தான் தமிழ் தேவாலயங்களை தாக்கியுள்ளார்கள்.

அரசின்மீது, சிங்கள மக்கள் மீதும் கோபம் இருந்திருந்தால், அவர்கள் ஒன்றில் சிங்கள பெளத்த விகாரைகளை தாக்கி இருக்கலாம். அல்லது, ஒரு மாதம் தாமதித்து வெசாக் பண்டிகையை குறி வைத்து இருக்கலாம்.

தாக்குதலுக்கு பிறகு ஓடியோடி போய், நியுசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கவே தாக்கினோம் என “ஐஎஸ்ஐஎஸ்”கார்களை சொல்ல வைத்த முயற்சி, சிறுபிள்ளைத்தனமானது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

ஆகவே “நாதியற்ற அப்பாவி” தமிழர்கள் பலிகடா ஆனார்கள். இதுதான் இதன் பின்னே ஒளிந்து நிற்கும் உண்மை.
இந்த ஒளிந்து நிற்கும் உண்மைக்கு பின்னே இன்னொரு உறங்கும் உண்மை இருக்கிறது. அது என்ன?
“ஐஎஸ்ஐஎஸ்”, “தலிபான்”, “அல்கைடா” போன்ற பயங்கரவாத ஆயுத கும்பல்களின் “சிந்தனை மற்றும் தோற்றப்பாடு” போன்றவைகளால் கவரப்பட்டு வழி தவறிய ஒரு பிரிவு இந்நாட்டு முஸ்லிம் இளையோரை, ஒரு அயோக்கிய அரசியல் கும்பல் பயன்படுத்தி உள்ளது.

அந்த கும்பல், “பாம்பும் சாகனும், கம்பும் உடைய கூடாது” என்று செயற்பட்டுள்ளது.
அதாவது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்கள் தூண்டப்பட வேண்டும். அதற்கு “சம்பவம்” வேண்டும்.
ஆனால், அந்த சம்பவத்தில் சிங்கள் பெளத்த மக்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே அந்த மெது இலக்கு (Soft Target) நாதியற்ற தமிழர்கள்தான். இதைதான் இவர்கள் செய்தார்கள்.

யார் செய்தார்கள் என்பதை கண்டறிய “ரொக்கெட் விஞ்ஞானிகள்” தேவையா என்ன?