ஓர் ஊரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அக்கூட்டத்துக்குப் பிரதம அதிதியாக எம்.எச்.எம்.அஷ்ரப் வந்தார். வழக்கம்போல மேடையில் இருந்தவாறு, கீழே நிற்கின்ற ஒவ்வொருவரையும் நோட்டமிட்டார்.

வழக்கமாக கச்சான் கொட்டைகளை (நிலக்கடலை) விற்பனை செய்யும் அந்த நபர், சனக் கூட்டத்தின் ஒரு மூலையில் மிகச் சிரமப்பட்டு, அவற்றை விற்க முயன்று கொண்டிருந்தார்.

தலைவர் அஷ்ரப், அவரை அழைத்து வரச் சொன்னார். சந்தோசத்தில் கச்சான் வியாபாரி ஓடி வந்தார். “உங்களது கச்சான் பக்கட்டுக்களின் விலை என்ன?” என்று கேட்டார். அவர் சொன்னார். அவர் போன பிறகு, “இன்று கச்சான் வியாபாரம் செய்யப் போகின்றேன்; விரும்பியவர்கள் வந்து, எனது கையால் கச்சான் பைக்கட்டுகளை வாங்கலாம்” என்றார்.

தலைவர் கையால் ஒரு பொருளை பெற்றுக் கொள்வது என்றால், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அந்த வாய்ப்பைத் தவற விடுவார்களா? ஓடோடி வந்தனர்; பல மடங்கு விலை கொடுத்து அவற்றை வாங்கிச் சென்றனர். அந்தப் பணத்தை தலைவர், அந்தச் சிறு வியாபாரியிடம் கொடுத்து, நல்ல சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

இது ஒரு சிறிய சம்பவம்தான். ஆனால், சமூகம் சார்ந்த அரசியலை பேசிக் கொண்டு மட்டும் இருக்கின்ற, வாய்ச்சொல் வீரர்களான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, இதில் நிறையவே படிப்பினை இருக்கின்றது.

மு.காவின் ஸ்தாபக தலைவரான எம்.எச்.எம். அஷ்ரப், இதைச் செய்ய வேண்டுமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த வியாபாரிக்கு ஒரு தொகைப் பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாம்; அல்லது, தானே எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கியிருக்கலாம்.

அந்த மேடையில், எவ்வளவோ வேலை அவருக்கு இருந்தும், ஒரு பொதுமகனின் சொந்த வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, இதைச் செய்தார். மிக முக்கியமாக, சரியான நேரத்தில், சரியான முறையில் அதை நடைமுறைப்படுத்தினார்.

ஓவ்வொரு பொதுமகனினது வாழ்க்கையிலும் அரசியல், சமூக, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் விதமாக சேவையாற்றுகின்ற அஷ்ரபின் இந்தப் பண்பும் சமூகம் சார்ந்த அரசியல் கோட்பாடுகளும், அவரது மறைவுக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின என்றுதான் சொல்ல வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளால் அஷ்ரபின் கொள்கைகளும் அவர் பெருமைகளும் மூன்று சந்தர்ப்பங்களில் பெரிதாகப் பேசப்படுகின்றன.

ஒன்று, தேர்தல் காலம்; அவரது புகைப்படத்தையும் வாசகத்தையும் எழுச்சிப் பாடல்களையும் மூலதனமாக வைத்தே, முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி எல்லாக் கட்சிகளும், இதுகால வரை அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.

இரண்டாவது, அவரது பிறந்த தினமான ஒக்டோபர் 23ஆம் திகதி. அடுத்தது, அவர் விமான விபத்தில்(?) மரணித்த செப்டெம்பர் 16ஆம் திகதி. அந்த வகையில், இந்த வருடமும் அஷ்ரபுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்தில், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் வகிபாகம் அளப்பெரியது. இன்றிருக்கின்ற எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் கொண்டுள்ள பாத்திரத்தை விட, பல மடங்கு கனதியானதாக அது இருந்தது. ஏனெனில், மக்களுக்கான அரசியலை அவர் செய்தார். அவர் கொண்டாடப்பட வேண்டியர்; நினைவுகூரப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள்தான், பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற இளம் சமுதாயத்துக்கு, உண்மையான தலைமைத்துவம் எது என்பதைச் சொல்வதற்கு, எம்.எச்.எம்.அஷ்ரப், பாக்கிர் மாக்கார், ரீ.பி.ஜாயா உள்ளிட்ட பலரின் முன்மாதிரிகளை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

இல்லாவிட்டால், இப்போது இருப்பதுதான் சிறந்த தலைமைத்துவம், இன்றிருக்கின்ற 20 முஸ்லிம் எம்.பிகளும் செய்கின்ற அரசியலையே, ‘உன்னதமான சமூக அரசியல்’ என்றும் நம்பி, ஏமாந்து விடுவார்கள். எனவே, அஷ்ரப், நிச்சயமாக நினைவுகூரப்பட வேண்டியவர் ஆவார்.

ஆனால், இன்று அவரின் பெயரால் அரசியல் செய்கின்றவர்கள், அவரது அரசியல் கோட்பாடுகளை பின்பற்றுவதாகச் சொல்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், உண்மையில் அவ்விதம் செயற்படவே இல்லை.

ஆகவே, அஷ்ரபின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவரது அரசியல் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக சமூகத்தை மறந்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், மறைந்த தலைவரைக் கொண்டாடுவதற்கு என்ன அருகதையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் இங்குள்ள வினாவாகும்.

ஒரு தந்தை நல்லவராக இருந்து, தனது பிள்ளைகளுக்கு நல்வழியை காட்டிக் கொடுக்கின்றார் என்றால், அவர் இறந்த பின்பு, அவரது பிள்ளைகளில் தந்தையின் வழிகாட்டுதலுக்கான பெறுபேறு வெளிப்பட வேண்டும்.

அதைவிடுத்து, குடும்பத்தை இரண்டாக, மூன்றாகப் பிரித்து, சொத்தை விற்று நாசமாக்கி, ஊருக்குள் இருந்த நல்ல பெயரையும் கெடுத்திருக்கின்ற பிள்ளைகளுக்கு, தந்தையின் பெருமையைப் பேசுவதற்கும், அவரது வழியிலேயே குடும்பத்தைக் கொண்டு செல்கின்றோம் என்று வாய்கூசாமல் பேசுவதற்கும் அருகதை கிடையாது. அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

ஆனால், சுயலாப அணுகுமுறையின் ஊடாக, முஸ்லிம் சமூகத்தை ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ள இன்றைய அரசியல்வாதிகள், அஷ்ரப்பின் கொள்கைகளைப் பின்பற்றாமல், அவற்றை சந்தைப்படுத்தி, அரசியல் இலாபம் உழைக்கவே இப்போதும் முனைகின்றமை, மிகக் கைசேதமான நிலையாகும்.

இன்றிருக்கின்ற அரசியல்வாதிகளுக்கும் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. பணத்தை, வாகனத்தை, பதவியை, சொத்தை எல்லாவற்றையும் விட, அவர் மக்களை நேசித்தார்.

ஆரம்பத்தில் பெருந்தேசிய அரசியலில் நாட்டம் கொண்டிருந்த மர்ஹும் அஷ்ரப், பின்னர் தமிரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். ஆயுதங்கள் முன்கையெடுக்கத் தொடங்கிய பிறகுதான், முஸ்லிம்கள் தனிவழியில் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

இதன்படி, எம்.எச்.எம்.அஷ்ரபும் அவரைப் போலவே சமூக சிந்தனையுள்ள செயற்பாட்டாளர்களும் இணைந்து முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற மரத்தில், இன்று கனி சாப்பிடுகின்ற 99 சதவீதமானோர், அதன் உருவாக்கத்துக்காக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட ஊற்றாதவர்கள் என்பது வேறுகதை.

1989இல் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட எம்.எச்.எம்.அஷ்ரப், ஆர். பிரேதமாஸ அரசாங்கத்துடன் பேரம்பேசும் சக்தியை உரசிப் பார்த்தார்.

அதன்மூலமே, மாவட்ட எம்.பி தெரிவுக்கான வெட்டுப்புள்ளியை ஐந்து சதவீதமாகக் குறைத்தார். அதன் பின்னர், 2004ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலப் பகுதியில், அவர் செய்த சேவைகள் இன்றும் பிரமிப்பாக நோக்கப்படுகின்றன.

உரிமை அரசியலையும் அபிவிருத்திசார் அரசியலையும் சமவிகிதத்தில் முன்னகர்த்திச் சென்றவர் இவர்தான். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியமை, அவர் கொண்டிருந்த தூரநோக்குக்கான நல்ல எடுத்துக் காட்டாகும். தொழிலிலும், அதற்கான தகுதிகள் குறைவாகவும் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, வீடுதேடிச் சென்று (இலஞ்சம் வாங்காமல்) தொழில்கொடுத்தார். முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி தமிழ், சிங்கள சமூகங்களுக்கும் சேவையாற்றினார். கோவில்கள், விகாரைகளுக்கு உதவினார். முஸ்லிம்களுக்கான அரசியலை, மற்ற சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு ‘இமேஜை’ கட்டமைத்தார்.

இன்றிருக்கின்றவர்கள் போல் அல்லாமல், நாடாளுமன்ற உரைகளை சமூகத்துக்காகப் பயன்படுத்தினார். அவரவருக்குப் புரியும் மொழியில், முஸ்லிம்களின் அபிலாஷைகளை எடுத்துச் சொன்னார். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.

அதாவது, ஒருவர் ஒரு தனித்துவ அடையாளத்துடனான கட்சியை உருவாக்கி, 11 வருடங்களே எம்.பியாக இருந்து, வெறும் ஆறு வருடங்கள் அமைச்சராக இருந்து, இவ்வளவு சேவையையும் செய்து விட்டுப் போய் இருக்கின்றார் என்பதாகும்.

ஆண்டாண்டு காலமாக எம்.பி, அமைச்சுப் பதவிகளை அலங்கரித்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், “நாங்கள் அஷ்ரபின் சிஷயர்கள்; 15 வருடங்களாக எம்.பியாக இருக்கின்றோம்” என்று சொல்லிக் கொள்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், தாங்கள் இதுபோல எதனைச் சாதித்துள்ளார்கள் என்று, சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும்.

எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்தும் கூட, இவ்வாறான ஒரு சேவையை இத்தனை வருடங்களாக ஏன் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்? அத்துடன், அஷ்ரபுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தால், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் அரசியல் தலைவர் ஏன் கிடைக்கவில்லை?

அதுபோல, 50 வயதில் அஷ்ரபுக்கு இருந்த தைரியம், அதைவிட வயதில் குறைந்த தற்கால முஸ்லிம் எம்.பிக்கோ அல்லது வயது கூடிய கட்சித் தலைவர்களுக்கோ தளபதிகளுக்கோ இல்லாமல் போய் இருக்கின்றது; அல்லது, ‘எதுவோ ஒன்று’ அதைத் தடுக்கின்றது.

இதனால், அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்திலேயே, 20 வருடங்களாக முஸ்லிம் சமூகம் நின்று கொண்டிருக்க, அரசியல்வாதிகள் மட்டும் முன்னேறி இருக்கின்றார்கள். எனவே, இவ்வாறான பின்னடைவுக்கான காரணத்தை அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

மறைந்த தலைவர் அஷ்ரபின் கனவு என்பது, முஸ்லிம் சமூகத்திற்கு விடிவைப் பெற்றுக் கொடுப்பதாகும்.