நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அதன் ஓரங்கத்தையே நியுயோர்க் நகரிலும் நேற்று கண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதம் மற்றும் வன்முறைகள் இடம்பெற இடமளிக்கப்படாதென இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார்.

எனினும் இந்த உறுதிமொழியை, அடை மழையினிடையே ஏற்படுகின்ற கடும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற வீட்டிலிருக்கின்ற பழைய இரும்புகளை வெளியே வீசி விடுவது போன்ற சர்வதேசத்தைத் திருப்திபடுத்துகிந தற்காலிக அறிவிப்பாகவே பார்க்கின்றோம்.

உண்மையில் அவ்வாறு மீள்நிகழாமையை உறுதி செய்ய வேண்டுமாயின், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கின்ற பிரதான சூத்திரதாரிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துகின்றனர். அதன் ஓரங்கத்தையே நியுயோர்க் நகரிலும் நேற்று கண்டோம்.

தாமதப்படுத்தும் நீதி குறித்த பிரச்சினை ஜெனீவா மாநாட்டிலும், தற்போது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திலும் அவதானிக்க முடிந்தது. உள்நாட்டிலேயே தீர்வுகளை விரைந்து வழங்கினால் அவ்வாறான அழுத்தங்கள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.