முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை, மத்திய வங்கியின் அளுநராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரால்  இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமாஅதிபர்,  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் நிதிச் சபை, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோர் இம்மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரலுக்கு பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வில்  அஜித் நிவாட் கப்ராலுக்கு பாரிய பொது நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அஜித் நிவாட் கப்ரால் என்பவர் அரசியல் மயமானவர் எனவும் அவர் 2020 பொதுத் தேர்தலின் பின்னர் பொதுஜனபெரமுன சார்பில் நாடாளுமன்றுக்கு தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டும் மனுதாரர்கள்,  நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ள இவ்வாறான அரசியல் பின்னணியிலான ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படுவதானது மக்களின் அபிலாஷைகளை சிதைக்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் அரசியலமைப்பு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

இதனைவிட பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை உயர் நீதிமன்றம் பெற்று விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.