நவீன உலகில் பெருந்தொற்றின் மறைவில் பாரிய விடயங்கள் மிக அமைதியாக நடைதேறுகின்றன. அரசியல் அரங்கை விட்டு ஓர் ஆளுமை வெளியேறுகிறது.

அது வேறு யாருமல்ல ஐரோப்பாவின் பொருளாதார ஆதிக்கம் வகிக்கும் சக்திகளின் ஒன்றும், ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்தின் மிகத் துல்லியமாக அசைவுகளை மேற்கொள்ளும் யேர்மனியினின் பிரதமரான ஏஞ்சலா மர்கேல் அவர்கள்தான். தனது 16 வருட அரசியல் சேவையை முடித்துக் கொண்டு அரசியல் அரங்கிலிருந்து இந்த ஆண்டு விடை பெறுகிறார்.

ஐரோப்பியவின் முக்கிய நாடுகளில் ஒன்றான யேர்மனியில் இந்த இலையுதிர் காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தடவை நடைபெறும் தேர்தலில், யேர்மனிய மக்களுக்கு கடந்த 20 வருடங்களில் நன்கு அறிமுகமான CDU (Christian Democratic Union of Germany) கட்சியின் தலைவராகவும் 2005 இலிருந்து 2021 வரை யேர்மனியின் பிரதமராகவும் இருந்த மேர்கல் பங்கு கொள்ளப் போவதில்லை.

நீண்ட காலத்திற்குப் பின்பு அரசியல் விமர்சகர்கள், ஆலோசகர்கள் மற்றும் செல்வாக்குத் செலுத்துபவர்கள், ஊடகங்களுக்கும் செய்தி ஸ்தாபனங்களுக்கும் தமது ஊகங்களையும் ஆய்வுகளையும் முன்வைக்க அரியதொரு வாய்ப்பை இந்த ஆண்டு யேர்மனியில் நடைபெற இருக்கும் இந்த தேர்தல் வழங்கப் போகிறது. தமது ஊகங்களை முன்வைக்கவும், கருத்துக்களை கூறவும், விவாதங்களில் கலந்து கொள்ளவும் சந்தர்ப்பத்தை வழங்கும் இத்தேர்தல் களைகட்டுவதற்கான வாய்ப்புக்கள் தாராளமாகவே இருக்கின்றன.

ஏஞ்சலா டோர்த்தியா மேர்கல் ( Angela Dorothea Merkel) ஹம்பேர்கில் பிறந்தாலும் இவரது குடும்பத்தினர் கிழக்கு யேர்மனிக்கு ( முன்பு DDR என்றழைக்கப்பட்ட) இடம்பெயர்ந்துவிட்டனர். இவரது தந்தை ஒரு பாதிரியார், தாய் ஒரு ஆசிரியர். பெளதீகவியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற மேர்கல் யேர்மனியின் வரலாற்றில் முதல் பெண்பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு யேர்மனியின் கடைசிப் பிரதமரின் பேச்சாளராக இணையும் இவர் 1990 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு யேர்மனியின் இணைவுக்குப் பின்பு ஒன்றிணைந்த யேர்மனியக்குடியரசு( Bundestage) சபைக்குத் தெரிவு செய்யப்படுகிறார். இவரது அரசியல் பிரவேசம் பேர்லின் மதில் சுவரின் வீழ்ச்சிக்குப் பின்பு ஆரம்பமாகிறது. 1991 இலிருந்து 1998 ஆண்டுவரை மகளீர் மற்றும் இளம் பருவத்தினருக்கான மந்திரியாக இவர் கடமையாற்றுகிறார்.

ஐரோப்பாவில் அதிக மக்கட் தொகையையும் மிகப் பெரிய பொருளாதாரத்தையும் கொண்ட நாடாக யேர்மனி இன்றும் விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான யேர்மனி கடந்த இரண்டு தசாப்தங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீர்மானங்களில் முக்கிய வகிபாகத்தை செலுத்தும் நாடாகவும் இருந்து வருகிறது.

பெற்றோர் மீது விஜய் அதிரடி வழக்கு !

ஐரோப்பிய ஒன்றியம் கடந்த இரு தசாப்தங்களில் பாரிய பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி, யூரோ நாணய மதிப்பிறக்கம், கடன் நெருக்கடி, அகதிகள் தொடர்பான சவால்கள் என்பன மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்ட கால அங்கத்தவ நாடான ஐக்கிய இராச்சியத்தின் பிரிந்து செல்லும் கோரிக்கை மற்றும் பெருந்தொற்றுப் பேரவலம் என பன்முகப்பட்ட சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

பதினாறு ஆண்டுகள் நவீன ஐரோப்பாவில் தலைமைப் பதவியில் நீடித்திருப்பதொன்றும் அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த காலப்பகுதியில் வேறுபட்ட பொருளாதார மற்றும் வெளிநாடுகளுடன் உறவுகளைப் பேணும் கொள்கைகளைக் கடைப்பிடித்த நான்கு வெவ்வேறு அமெரிக்க ஜனாதிபதிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் முக்கிய இயங்கு தலைமைகளின் ஒன்றான பிரான்சின் ஆட்சியிலிருந்த நான்கு பிரதமர்கள், ஐக்கிய இராச்சியத்தின் ஆறு பிரதமர்கள், ரசியாவின் நீண்ட காலம் ஆட்சியிலிருக்கும் பூட்டின் ஆகியோர்களுடான இராஜதந்திர உறவுகளைப் பேணவேண்டிய அவசியத்தையும் கொண்டிருந்தார்.

மேர்கல் ஐரோப்பாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த வேளையில் தான் அமெரிக்காவின் வங்கிகள் வங்குரோத்து நிலமையை அடைந்தன, இதன் விளைவாக ஐரோப்பிய பொருளாதாரமும் ஆட்டம் காணத் தொடங்கியது. நிதி நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்கு அப்போது பிரான்சின் பிரதமராக இருந்த ஸர்கோசி ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் அனைத்தும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது மேர்கல் ஒவ்வொரு நாடும் தத்தமக்குரிய தேசிய திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேர்கல் பிரச்சனைகளுக்கு முகம் கொடும் விதம் ஏனைய அரசியல் தலைவர்களை விட மாறுபட்டதாக இருந்ததை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது எனவும் இவர் சற்று தாமதாகவே முடிவுகளை எடுப்பவர் என்ற விமர்சனமும் இவர் மீது முன்வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவ நாடான கிறீக் நெருக்கடியை எதிர்நோக்கிய போது ஐரோப்பிய ஒன்றியம் திடமாக இருக்க வேண்டும் ஆனால் யேர்மனிய மக்களின் வரிப்பணத்தில் கிறீக் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்பதில் திடமாக இருந்தார். பல அங்கத்துவ நாடுகள் கீறீக் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது நல்லது என அபிப்பிராயப்பட்ட போதிலும் இறுதி தருணத்தில் ஒப்பந்தங்கள் மூலம் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

யேர்மனி அரபு உலகில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள், யுத்தங்கள் எவற்றிலும் தானாக முன்வந்து நடவடிக்கைகளை எதையும் எடுக்கவில்லை. ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்நாட்டு யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. இவற்றின் விளைவாக அகதிகள் உருவாக்கிய வண்ணமே இருந்தனர். இவற்றில் எதிலுமே மூக்கை நுழைக்காத நாடாக யேர்மனி இருந்து வந்தது. இதற்கு இவர் இளம் பருவ காலத்தில் கிழக்கு யேர்மனியில் வசித்த போது கிடைத்த அநுபவங்களும் முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது யேர்மனிக்கு கிடைத்த அநுபவங்கள் கூட காரணமாக இருக்கலாம். அரபு வசந்தத்தின் போது லிபியா, சிரியா போன்ற நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களுக்கு பிரான்சும் பிரித்தானியாவும் ஆயுத தளபாடங்களை போராளிகளுக்கு வழங்கிய போதும் யேர்மனி நின்று நிதானமாகச் செயற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைவலியை ஏற்படுத்திய விடயங்களில் ஒன்றாக 2014 இல் ரஸ்சியாவின் யுக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அமைந்திருந்தது. இந்த நிலைமையின் போது மொஸ்கோ மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு மேர்கல் தயங்கவில்லை மாறாக தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
மேர்கல் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது சீனாவுடனான நட்புறவாகும். யேர்மனி தனது ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு எப்போதும் நடந்து கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஐரோப்பாவின் ஜனநாயக மரபுகள் மற்றும் ஸ்திர தன்மைக்கு ஆபத்து ஏற்படும் போது உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் தனது ஆதரவையும் வெளிபடுத்தியிருந்தார். இதற்கு உதாரணமாக பிரான்சில் ஊடகவியாளர்கள் மீதான தாக்குதலின் பின்பு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஏதிரான ஊர்வலத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவையும் பயங்கரவாத்திற்கு ஏதிராக போராட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த இவர் தயங்கவில்லை.

அகதிகள் தொடர்பான விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் நடவடிக்கை ஒன்றைக் கோரிய விடயமாக அமைந்திருந்தது என்பதுடன் பல ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைகளை பாதுகாக்கவே முற்பட்டன. சிரியா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து உ ள்ளூரில் நடைபெற்ற யுத்தம் காரணமாக அகதிகள் அலைஅலையாக கிறீக், இத்தாலி போன்ற நாடுகளுக்கு மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வந்து கொண்டிருந்தனர், ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடியபடியே இருந்தது. ஆனால் யேர்மனி அதைச் செய்யவில்லை, ஒரே நாளில் சுமார் 17 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொண்டது. இது யேர்மனிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் குடிப்பரப்பலையும் தலைவிதியையும் கூட மாற்றியமைக்கும் விடயமாக அமைந்தது.

மேலும் இடம்பெயரும் மக்களை ஐரோப்பாவிற்கு அனுமதிப்பதில் ஆர்வம் காட்டாத ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மூலம் ஐரோப்பாவிற்குள் அகதியாக மக்கள் வருவதை தடுக்கும் முயற்சியாக துருக்கி நாட்டின் பிரதமருடன் பேச்சுவார்த்தையை மேறகொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர் மேர்கல். இதன் விளைவாக 2019 இல் ஐரோப்பாவிற்குள் அகதிகளாக மக்கள் வருவதை தடுக்கு முகமாக ஒப்பந்தம் ஒன்றும் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் துருக்கி பல சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் மூலம் பெறுகின்ற அதேவேளை அகதிகளா வந்த மக்கள் மூடப்பட்ட முகாம்களுக்குள் அடைக்கப்படுகிறன்றனர். மனிதஉரிமைகள் விடயத்தில் மேர்கல் கவனக்குறைவாக நடந்து கொண்டார் என்ற விமர்சனம் இவருக்கும் பொருந்துகிறது.

இறுதியாக மேர்கல் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனையாக ஐக்கிய இராச்சியத்தின் பிரிந்து செல்லும் கோரிக்கை அமைகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவுக்கான காரணங்களில் ஒன்றாக அகதிகளின் வருகை குறிப்பிடப் பட்ட போதிலும் அது பிரதான காரணமாக அமைந்திருக்க முடியாது என்றே கூற வேண்டும். ஒரு முக்கிய, நீண்ட கால அங்கத்துவ நாட்டை ஐரோப்பிய ஒன்றியம்தற்போது இழந்து விட்டது.

மேர்கல் மீது வைக்கப்படும் இன்னுமொரு விமர்சனம் சூழல் மாசடைதல் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எதையும் அவர் மேற் கொள்ளவில்லை என்பதாகும், மோட்டார் வாகன உற்பத்தியை பிரதான ஏற்றுமதியாக கொண்டிருக்கும் யேர்மனி தனது பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதுஎன்பது எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தே இருந்தது, இது மட்டுமல்லாது யேர்மனியில் இன்னமும் பல நிலக்கரிச்சுரங்கங்கள் உற்பத்தியில் ஈடுபட்டவண்ணமே இருக்கின்றன.

இவைகள் எல்லாவற்றுக்கும் அப்பால் சிறந்த தலைவராக, ஊழல், மற்றும் சொத்துப்பதுக்கலில் ஈடுபடாது எளிமையான முறையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மேர்கல் பலருக்கு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.