தளம்
இந்தியா

150 நாட்களில் 202 வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது .!

தமிழ்நாட்டு மக்கள் தங்களின் நலன் காக்கும் நம்பிக்கை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பாசமும் பற்றும் கொண்டு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடே வியக்கும் மகத்தான வெற்றியையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பெருமிதமிக்க வெற்றியையும் வழங்கியதைப் போலவே; 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு போற்றும் மிகப்பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.

10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் இருள் மண்டிக்கிடந்திருந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கிராமப்புறங்களுக்கு மட்டுமான தேர்தல் என்பதால் எப்படியாவது தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என ஆட்சியதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க போட்ட கணக்கு தப்புக்கணக்காகி, தமிழ்நாட்டு உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக, எதிர்க்கட்சியான தி.மு.க. 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

அதிகாரம்-செல்வாக்கு- பணபலம்-ஆணவம்- அரட்டல் உருட்டல் என அ.தி.மு.க.வின் அத்தனை அஸ்திரங்களையும் தொண்டர்களின் கடும் உழைப்பு மக்களின் பெரும் ஆதரவு எனும் இரு கணைகளால் எதிர்கொண்டு தி.மு.க. இந்த வெற்றியைப் பெற்ற நிலையில், தி.மு.க. வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரங்களையும் பிற வசதிகளையும் வழங்குவதில் அன்றைய அ.தி.மு.க. அரசு வேண்டுமென்றே பாரபட்சம் காட்டியது. எனினும், மக்கள் பணியாற்றுவதில் சளைக்காத தி.மு.க.வினர், உள்ளாட்சி அமைப்புகளில் திறம்படப் பணியாற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர். சட்டமன்றத் தேர்தலிலும் அந்த நம்பிக்கை, வெற்றியாக விளைந்தது.

கடந்த ஆட்சியில், மாவட்ட எல்லைகள் அவை சார்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கான எல்லைகளை வரையறை செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கப்பணிகள் தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

9 மாவட்டங்களுடன், மேலும் சில மாவட்டங்களில் இடைத்தேர்தல் என மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 23 ஆயிரத்து 998 பொறுப்புகளுக்கான இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுகிற பணி, அக்டோபர் 12-ம் நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்கியிருப்பது உறுதியானது.

140 மாவட்ட உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளில் 138 இடங்களில் தி.மு.க கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் தி.மு.க கழக அணியே பெறுகின்ற வாய்ப்பினை மக்கள் வழங்கியுள்ளனர். அது போலவே, 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க. அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளில் 73 பொறுப்புகள் தி.மு.க அணியின் வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் கழகம் வெற்றியைக் குவித்துள்ளது.

உங்களில் ஒருவனான இந்த “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” தலைமையிலான அரசின் 5 மாத கால ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான்-பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. “இது எனது அரசு அல்ல.. நமது அரசு” என்று உங்களில் ஒருவனான நான் சுட்டிக்காட்டி வருவதை மக்கள் முழுமையாக ஏற்று, தி.மு.க. அரசின் திட்டங்களால் பயன்பெற்று, அவை எவ்விதத் தொய்வுமின்றித் தொடர வேண்டும் என ஆதரித்து வாக்களித்து, கழகத்தின் மீதான தங்களின் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி உணர்த்தி இருக்கிறார்கள்.

மக்கள் வளர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை தேர்தல் களத்தில் மறக்க முடியாத வெற்றியாக மாற்றிக் காட்டிய சாதனையாளர்கள், நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள்தான். உங்களில் ஒருவனான நான், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நேரடியாகப் பரப்புரை செய்ய இயலவில்லை. அதற்குக் காரணம், முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே காத்திருந்த சவால் நிறைந்த கடமைகளும், அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளும்தான்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்தி, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி, மூன்றாவது அலை குறித்த அச்சத்தைப் போக்கி, நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் கழகம் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 150 நாட்களுக்குள்ளாக 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது நமது அரசு.

நாள்தோறும் திட்டங்கள், துறைதோறும் முழு வீச்சிலான செயல்பாடுகள் எனத் தமிழ்நாட்டின் இருண்ட காலத்தை விரட்டி அடிக்கும் உதயசூரியனாக கழக ஆட்சி ஒளி வீசுகிறது. அதன் பலனைத் தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக உணர்ந்து பயன்பெறுகிற காரணத்தால்தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்திருக்கிறார்கள். கழக அரசின் செயல்பாடுகளை எடுத்துரைத்து காணொலி வாயிலாக நான் வாக்கு சேகரித்தேன்.

தி.மு.க. உடன் பிறப்புகளான நீங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து, வெற்றியை உறுதிசெய்தீர்கள். அந்த நற்பணிக்கான நன்றியையும் வாழ்த்துகளையும் இதயப் பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காகக் களப்பணியாற்றிய தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

வெற்றிபெற்ற கழகத்தினர் தங்களின் வெற்றிச் சான்றிதழை என்னிடம் காண்பித்து, வாழ்த்து பெறுவதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார்கள். இடைவிடாத பணிகளுக்கிடையிலும், இரண்டு மணிநேரத்தை அவர்களுக்காக முழுமையாக ஒதுக்கி, வெற்றி பெற்றுள்ள கழகத்தினரை நேரில் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

போலீசாரின் அலட்சியத்தால் காலை இழந்த சிறுவன்…!

Fourudeen Ibransa
1 year ago

பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத இலங்கை .!

Fourudeen Ibransa
2 years ago

மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தம்பதி.!

Fourudeen Ibransa
2 years ago