இராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர இராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க(Dayan Jayatilakke) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும், தேர்தல் முறைமை மாற்றப்படும் உள்ளிட்ட விடயங்கள் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.

இராணுவத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வொன்றில் இவ்விதமான கருத்துக்களை வெளியிட வேண்டியதன் அவசியம் என்னவென்று தயான் ஜயத்திலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவ நிகழ்வில் இவ்விதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதன் மூலம், 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போதுள்ளவாறு அமுலாக்க முடியாது, அதன் கீழ் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்பதை மறைமுகமாக ஜனாதிபதி கோட்டாபய வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20ஆவது தடைச்சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு புதிய அரசியலமைப்புக்கான அவசியம் என்ன என்ற கேள்விகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, புதிய அரசியலமைப்பு அதிகாரப்பகிர்வினை கொண்டிருக்குமா என்பது பற்றி நம்பிக்கை கொள்ள முடியாது என்று குறிப்பிடும் தயான் ஜயதிலக்க, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு பல்லின இலங்கைக்கு பொருத்தமற்றதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் புதிய அரசியலமைப்புக்கான கூற்றானது 13ஆவது திருத்தச்சட்டத்தினை இல்லாது செய்வதற்னான செயற்பட்டை இந்தியாவில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கயமையை முன்வைத்து தர்க்க ரீதியான நியாயங்களை வெளிப்படுத்துவதற்கு முனைவதாக கூட இருக்கலாம்.

ஆனால், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தபோது அது இந்தியாவிலிருந்து வேறுபடுத்தப்பட்டிருந்தது.

ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள நிலையில் அதனை ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கம் நீக்க முனைவதானது அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் அபாயத்தினையே உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் புதிய அரசியலமைப்பு தொடர்பான கோட்டாபயவின் கருத்தானது இந்தியாவுடனான தந்திரோபாய ஒத்துழைப்பு மற்றும் சீனாவுடனான மூலோபாய கூட்டணி ஆகியவற்றை வெளிப்படுத்தும் கொள்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கோட்டாபயவின் இவ்விதமான செயற்பாடானது சர்வதேசத்துடன் இலங்கையை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக விரிசல்களையே ஏற்படுத்துவதோடு தலையீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கும் வழிசமைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.