அரசின் அசமந்தப்போக்கால் விரைவில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தால் வதைபடக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளுக்கு நாள் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என அடுக்கடுக்காக விலைகளின் உச்சம் ஏறிய வண்ணமே உள்ளது. இது பற்றி அரசிடம் வினாவினால் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதும், ‘கழுவிய மீனில் நழுவிய மீன்‘ போல் நடந்துகொள்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டு வந்துள்ளது.

விலை வாசி உயர்வு ஒரு பக்கம் இருக்கும்போது, மற்றொரு பக்கம் வாழ்வாதாராத்தின் அடிப்படையாகவுள்ள விவசாயிகளின் மடியில் அரசு தற்போது கைவைத்துள்ளது. சர்வதேச அளவில் விவசாயிகளின் பிரச்சினை பேசப்பட்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் தற்போது நாட்டில் உரத்துக்கான தட்டுப்பாடானது விவசாயிகளின் மத்தியில் பெரும் அவல நிலையாகவுள்ளது.

குறிப்பாக மலையக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேயிலை பயிர்ச்செய்கை, மரக்கறி உற்பத்தி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டே வாழ்பவர்கள். இவ்வாறு எமது மக்களைத் தொடர்ந்தும் இந்த அரசு குறிவைப்பது ஏன்?

சர்வதேச அளவில் பல மில்லியன் டொலர்களை அரசு கடனாகப் பெற்றுக்கொண்ட போதிலும் மலையக மக்களுக்கென எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பது நிதர்சனம் மிக்க உண்மையாகும்.

அரச தரப்பினர் தேர்தல் காலங்களில் அனுதாப வாக்குக்காகவும், அரசியல் சுயலாபத்துக்காகவும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று கமுக்கமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கு அப்பாவி மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்தும் அரசு தனது அசமந்தப்போக்குத் தொடருமானால் நாட்டில் பட்டினிச் சாவு என்பது வெகுதொலைவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, அரசு மக்களுக்கான தீர்வை விரைந்து பெற்றுக்கொடுக்க வேண்டும்” – என்றார்