அடுத்த சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்பது நிச்சயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

தூரநோக்கமற்ற அரசியல் தீர்மானங்கள் காரணமாக நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்பது நிச்சயம். அத்தோடு தற்போதைய அரசாங்கமும் வீழ்ச்சியடையும் என்பதும் நிச்சயம். இதனால், நாம் புத்திசாலித்தனமாகச் செயற்படுவோம்.

ராஜபக்சவினரின் தூரநோக்கமற்ற அரசியல் தீர்மானங்கள் காரணமாக நாடு அடுத்த சில மாதங்களுக்குள் வங்குரோத்து நிலைமையை அடைவது நிச்சயம் என்பது புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது தெளிவாகியுள்ளது.

அத்துடன் நாட்டின் புறச்சூழல், தோல்வியான, தலைக்கணம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு வழங்கும் செய்தியை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டின் தலைவர் எப்போது நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

உழவர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், சிறிய வர்த்தகர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை, பிள்ளைகளின் கல்வி, குடும்ப பெண்களின் வாழ்க்கை செலவு தொடர்பான பிரச்சினை என்பன ஜனாதிபதிக்குப் புரியவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் முதலீடு, அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில், நாட்டின் இறையாண்மை, தேசிய அபிலாஷைகள் குறித்த குறைந்தபட்ச உணர்வு கூட ஜனாதிபதிக்கு இல்லை என்பது, யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கைக்கு இடமளித்திருப்பதன் மூலம் தெளிவாகியுள்ளது.

அதேபோல் சீன தூதரகம் தேவையற்ற வகையில், எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கட்டமைப்பின் ஆய்வு நிறுவனங்கள் மீது ராஜதந்திர சிறப்புரிமைகளையும் மீறி தலையீடுகளைச் செய்வது, அவற்றின் நம்பிக்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட அனுமதித்து விட்டு வேடிக்கை பார்ப்பது, அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது என்பன ஜனாதிபதிக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத இலங்கை மக்களின் நாடி துடிப்பு உணர்ந்து விட்டது.

திட்டமிடாத தீர்மானங்களுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் நடந்து கொள்ளும் விதம், மக்களின் பிரச்சினைகளில் முக்கியத்தை அடையாளம் காணாமை, வளங்களை மதிப்பீடு செய்யாமை, திட்டமிடுதலின் மிக மோசமான பலவீனம், பொருளாதார முகாமைத்துவ தீர்வுகளில் காணப்படும் பற்றாக்குறை மாத்திரமல்லாது வாரந்தோறும் நாட்டை நிர்வகித்து செல்வதற்கு டொலர்களை பிச்சை எடுப்பது “சௌபாக்கிய நோக்கு” என்றால், கோட்டாபய நீங்கள் வெட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.