அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பயன்படுத்திய மூலோபாய செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்கே வினையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் எப்படி ஆட்சிக்கு வந்தது என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். ஈஸ்டர் குண்டு தாக்குதலே அரசாங்கம் ஆட்சிக்கு வர அடிப்படை காரணமாக இருந்தது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுக்கவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றத்தை சுமத்தினர்.

உண்மையில் இந்த அரசாங்கம் குண்டை வெடிக்க செய்தே ஆட்சிக்கு வந்தது. தற்போது அதன் பிரதிபலனை அரசாங்கம் பாரதூரமாக அனுபவித்து வருகிறது. வீடுகளில் தற்போது சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்து வருவதுடன் வயல் வெளிகளில் பசளை தாங்கிகளும் வெடித்து வருகின்றன.

காணப்படும் இந்த நிலைமைக்கு அமைய அரசாங்கம்  வெடித்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தது போல் மீண்டும் வெடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.