தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணத்தில் கைச்சாத்திடுவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்று (02) தீர்மானித்திருந்தது.

13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதை முன்னிலைப்படுத்தி, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் ஆவணம் ஒன்றை தயாரிக்கும் நோக்கில், பல்வேறு தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இதில் இறுதியாக இணைந்துக் கொண்ட இலங்கைத் தமிழரசு கட்சி, 7 பக்க ஆவணம் ஒன்றை தயாரித்து வழங்கி, அதில் சில திருத்தங்களையும் மேற்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவிப்பதாக அறிவித்திருந்தது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும் இந்த ஆவணம் மலையக மற்றும் முஸ்லிம்கள் கட்சிகள் முன்வைத்த சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனோடு இணங்க முடியாது என்று இலங்கைத் தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.