இந்தியாவுடனான 2 வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆபிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 266 ஓட்டங்களும் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 229 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 240 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. உணவு இடைவேளையும், தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டன.

பின்னர் ஆட்டம் தொடங்கியவுடன் கேப்டன் டீன் எல்கரும், ராசி வாண்டர் டூசனும் பாட்னர்ஷிப்பை தொடர்ந்தனர். இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு படிப்படியாகக் குறைந்தது.

3 வது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டூசன் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார். இதனால், இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உருவானது.

ஆனால், அதன்பிறகும் எல்கர் மற்றும் தெம்பா பவுமா மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியால் மேற்கொண்டு விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை.

67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்த தென் ஆபிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் 96 ஓட்டங்களும், பவுமா 23 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1 – 1 என சமநிலையில் உள்ளது.

வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துவது இதுவே முதல்முறை