இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பை விட கடன் தொகை அதிகமாக உள்ளது. நாட்டில் இருக்கும் அந்நிய செலாவணியை வெளியில் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இலங்கை அரசு, வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதியை நிறுத்தி உள்ளது. தானிய விளைச்சலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. நிலைமையை சமாளிக்க 1.2 பில்லியன் பொருளாதார நிவாரணத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி மூன்றாவது வாரத்தில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எரிசக்தி துறை மந்திரி உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு கரன்சியை செலுத்தும்படி மத்திய வங்கியை வலியுறுத்தி உள்ளார்.

எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலையில் இருப்பதால், வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தயாராக இருக்கும்படி இலங்கை மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது. திரிகோணமலையில் உள்ள எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தத்தில் இந்தியா- இலங்கை அரசுகள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.