இவ்வருடத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நேற்றையதினம் (15) சந்தித்துக் கலந்துரையாடிய அவர், தேசிய பொருளாதாரம் மாத்திரமல்லாது அரச நிர்வாகக் கட்டமைப்பும் சீர்க்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“எந்தவொரு அரசாங்கத்தினாலும் நாட்டை நிர்வகிக்க முடியாத அளவிற்கு நெருக்கடியான நிலைமை உருவெடுத்துள்ளது. நிலையானதொரு கொள்கை இன்மையே இந்த நெருக்கடிக்கு பிரதான காரணமாகும்.

மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகள் தொடர்பில் நம்பிக்கை எழுந்துள்ளது. தற்போதை அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள்.

எனவே ஆட்சி மாறினாலும் தேசியக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு நாட்டை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறானதொரு நிலையான கொள்கை இல்லாவிடின் ஒருபோதும் மீட்டெடுக்க இயலாது” என்றார்.