” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். எமது கொள்கையென்பது எங்கள் மக்களின் அபிலாஷைகளையே பிரதிபலிக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.

எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

போர் முடிவடைந்திருந்தாலும் சமாதானம் வந்துவிட்டதாக கூறமுடியாது. போர் ஏற்படுவதற்கு வழிசமைத்த காரணிகள் இன்னும் அவ்வாறே உள்ளன. இதற்கு சரியான பரிகாரம் தேட வேண்டும். புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி சொல்கின்றார். அதன் ஊடாகவேனும் நிலையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்றார்.