அரசிலிருந்து வெளியேறும் எந்த எண்ணமும் கிடையாது. ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க நாம் உருவாக்கிய அரசாங்கத்தோடு புதிய பயணத்தை தொடருவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது நிலவும் மாற்றுக் கருத்துக்கள் தொடர்பில்கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் பொதுஜன பெரமுனவுடன் தேர்தலுக்கு முன்பதாக ஒப்பந்தங்களை மேற்கொண்டோம். சில இணக்கப்பாடுகளை செய்தோம். எனினும் தேர்தலுக்குப் பின்னர் நாம் செய்த சேவை எமது அர்ப்பணிப்பு எதிர்பார்த்தளவு

கவனத்திற்கொள்ளப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் சிலர் சஜித் பிரேமதாசதான் தேர்தலில் வெல்லுவார். நாம் அவருடன் இணைவோம் என ஆலோசனை கூறினர். அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெருமளவிலானோரின் கருத்து அதுவாகவே இருந்தது. நான் கட்சியின் செயற்குழுவில் கட்சியின் மாநாட்டின் போதும் பொதுஜனவுடனேயே நாம் இணையவேண்டுமென வலியுறுத்திக்கூறினேன்.

அதனையடுத்தே நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒன்றிணைந்து உழைத்தோம். அப்போது நாம் பொதுஜன பெரமுனவுடன் சில உடன்படிக்கைளை மேற்கொண்டோம். எனினும் தேர்தலுக்குப் பின்னர் அவை கணக்கிலெடுக்கப்படவில்லை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு 5 வருட ஆட்சிக்காக வாக்களித்துள்ளனர். இந்தநிலையில் நாம் அவசரமாக எந்த தீர்மானத்தையும் எடுத்துக்கொண்டு நிர்க்கதிக்குள்ளாகும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. தொடர்ந்தும் அரசாங்கத்துடனிருந்து பிரயோசனமில்லையென இப்போதும் சிலர் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கும் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். நாம் வெளியே சென்று என்ன செய்வது என நான் கேட்கவிரும்புகிறேன். ஜே.வி.பி.யினரைப் போன்று பதாகைகளை ஏந்திக்கொண்டு திரிவதா? இந்த அரசாங்கம் நாம் உருவாக்கிய அரசாங்கம். நாம் பொறுமையுடன் காத்திருக்கிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் முக்கியமான விடயங்களை அண்மையில் வெளியிட்டுள்ளனர். நடந்த தவறுகள் எதிர்காலத்தில் நடக்காது என உறுதியளித்து புதிய பயணத்தைத் தொடருவோம் என தெரிவித்துள்ளனர். நாம் அதை நம்புவோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.