பேராசிரியர் விஜய் பிரசாத்

ன்றைக்கு உலக அரசியல் அரங்கில் ‘போர்க் குற்றங்களைப்’ பற்றி மேற்கத்திய நாடுகள் திடீரென கூப்பாடு போடுகின்றன; ஒப்பாரி வைக்கின்றன.  போர் என்பதே குற்றம்தானே; அப்படியிருக்கையில் போர்க்குற்றங்களைப் பற்றி மட்டும் சிலர் பேசுவது எந்தவகை அரசியல்” என்று சர்வதேச வரலாற்றியல் அறிஞர்களில் ஒருவரும் மார்க்சிய ஆய்வாளருமான பேராசிரியர் விஜய் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

நியூயார்க்கில் உள்ள ‘மக்கள் மன்றம்’ (The People’s Forum)அரங்கில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் உரையாற்றிய விஜய் பிரசாத் பேசியதன் சாராம்சம் வருமாறு:  “உலகின் மிகப்பெரிய போர்கள் என்பவை ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதுதான். 270 கோடி மக்கள் இன்றைக்கு முழுமையான உணவு  கிடைக்கப்பெறாத நிலையில் உள்ளனர். இது, போர்க்குற்றங்கள் என்று கூறி இன்றைக்கு கூப்பாடு போடுகிற பலரது கண்களுக்குத் தெரியாத உண்மை. கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு கிடைக்கப்பெறவில்லை. பல லட்சக்கணக்கான ஆப்கானிய மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இதைப் பற்றி அவசரமாக பேசுவதற்கு இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூடியதில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியல் பாதுகாப்பு குறித்து பேசுவதற்காக அவசரமான முறையில் ஒரு போதும் பாதுகாப்பு கவுன்சில் கூடியதில்லை. ஆனால்  இன்றைக்கு ஜெர்மனியின் அதிபரும் உக்ரைனின் ஜனாதிபதியும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் அவசர அவசரமாக பாதுகாப்புக் கவுன்சிலை கூட்டுமாறு ஓலமிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களது ஐரோப்பாவில் போர் நடக்கிறது என்பதுதான் அவர்களது பிரச்சனை. 

ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் போர் நடந்தால் அது உலகின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது; உலகமே அந்தப் பிரச்சனையை உற்றுநோக்கி பேச வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது; ஆனால் சிரியாவுக்கு  எதிராக மிகப்பெரிய யுத்தம் தொடுக்கப்பட்டதே; பாலஸ்தீன மக்களுக்கு எதிராக  மிகக்கொடிய யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறதே; ஏமனில் இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்படுகிறதே… அவையெல்லாம் யுத்தங்கள் இல்லையா?  ஐரோப்பாவில் ராணுவ மோதல் நடந்தால், அதன் விளைவாக ஏற்படும் மரணங்கள் தான்  கொடூரமானவையா? சிரியாவிலும், லிபியாவிலும், பாலஸ்தீனத்திலும், ஏமனிலும் எத்தனை எத்தனை ஆயிரம் குழந்தைகள் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டார்கள், அவர்களது உடல்கள் உயிரற்ற வெறும் ஜடங்களா? ஏமன் மக்கள் மீது சவூதி அரேபியா மட்டுமல்ல, அவர்களோடு சேர்ந்து பிரிட்டிஷ் படைகளும் அமெரிக்க ராணுவத் துருப்புக்களும் துல்லியமாக குழந்தைகள் மீதும், மக்கள் மீதும்   குண்டுகளை வீசிய வண்ணம் இருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட் கம்பெனிகளான  பி.ஏ.இ சிஸ்டம்ஸ், லாக் ஹீட் போன்ற நிறுவனங்களின் நவீன ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் வேட்டைக்காடாக ஏமன் மாற்றப்பட்டிருக்கிறதே…! எனவே போர் என்பதே பெரும் குற்றம்தான். ரோசா லக்ஸம்பர்க் மிக அழகாகச் சொல்வார் : “அமைதிக் காலங்களில், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவார்கள்; போர்க்காலங்களில், ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் மற்ற நாட்டின் தொழிலாளர்களது நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் கழுத்தை அறுப்பார்கள்”.

போர் என்பது…

போர் என்பது ஒரு போதும் ஏழைகளுக்கு நல்லதல்ல; போர் என்பது ஒரு போதும் தொழிலாளர்களுக்கு நல்லதல்ல; போர் என்பதே பெரும் குற்றம். போர் என்பது ஏராளமான குற்றங்களை உற்பத்தி செய்கிறது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அங்கு நடந்தது, ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்பட்டது. அவர்களது மொழியில்  ‘நல்ல போர்’ என்கிறார்கள். ஆனால் அது உண்மையிலேயே நல்ல போரா?  ஆப்கானிஸ்தானில் நடந்தது மிக மிகக் கொடிய யுத்தம். அன்றைய நாளில் அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தன. பின்லேடனை ஒப்படைக்குமாறு தலிபான்களுக்கு உத்தரவு போடும் அளவிற்கு நெருக்கமாகத் தானே அமெரிக்கா இருந்தது! பின்லேடனை கொண்டு வந்து, அவர் மீது பொருத்தமான  முறையில் நீதி விசாரணை நடத்தி, அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தண்டனை அளித்திருக்க முடியுமே! 

மக்கள் மீது எந்த அக்கறையுமில்லை

ஆனால் அமெரிக்கா அத்தகைய வழியை பின்பற்றவில்லையே! எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நேரடியாக யுத்தத்தில் இறங்கியது. ஏனென்றால் அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள எளிய மக்களின் உயிர் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் யுத்தம் நடத்திய எந்த நாட்டின் மக்களைப் பற்றியும், அவர்களது வாழ்விடம், வருமானம், உயிர்கள் உட்பட எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.  அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட சக்திகள் எப்போதுமே சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பேசிக் கொண்டே இருப்பார்கள். உலக ஊடகங்களும் அதைப் பற்றியே பேசும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விதிகளைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் அதே விதிகளை தங்களது நாடுகளில் அமலாக்க மறுப்பார்கள்.  கியூபாவின் எல்லைக்குள் அமைந்துள்ள குவாண்டனாமோ தீவில் அமெரிக்கா எழுப்பிய சிறைக் கொட்டடியில் எத்தனை எத்தனை அப்பாவிகள் கொடிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்; அபுகாரிப் சிறையில் எத்தனை வெளிநாட்டு அறிஞர்கள், வீரர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்! இதையெல்லாம் இந்த உலகம் எப்போது அறியும்?

இன்றைக்கு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சேர்ந்து கொண்டு மனித உரிமைகளைப் பற்றி வாய்வலிக்க குரைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் நடத்திய மனித உரிமை மீறல்களையும் மிகப்பெரும் படுகொலைகளையும் யார் அம்பலப்படுத்துவது? அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ, எத்தனை ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைகளில் எவ்விதத் தடையுமின்றி பறந்து சென்று, பல்வேறு நாடுகளில் உள்ள – தங்களது எதிரி என அடையாளம் காணப்பட்ட பலரை கடத்தியும், தூக்கி வந்தும் உயிரோடு சித்ரவதை செய்கிறார்கள் என்பதை இந்த உலகம் மறந்து விடுமா?

பொய்களை உற்பத்தி செய்யும் போர்

எனவே போர்க் குற்றங்களைப் பற்றி இவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை போர் என்பதே குற்றம்தான். போர் என்பது புதிய புதிய குற்றங் களை உற்பத்தி செய்கிறது; போர் என்பது பொய்களை உற்பத்தி செய்கிறது; போர் என்பது மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் குழிதோண்டிப் புதைக்கிறது. 

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா யுத்தம்  தொடுத்த முதல் நாள் தொடங்கி 20 ஆண்டு  காலம் பொய்களை மட்டும்தான் பேசியிருக்கிறது. இராக்கில் யுத்தம் துவக்குமுன்பும், துவக்கிய பின்பும் அமெரிக்கா பொய்களை மட்டும்தான் பேசியது; பொய்களை மட்டும் தான் உலகம் முழுவதும் பரப்பியது.

இதுபோன்ற இவர்களது பொய்களை உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்கள், இதழியல் விழுமியங்கள் அனைத்தையும் படுகொலை செய்துவிட்டு, கூடுதல் பொய்களாக மாற்றி கூச்சநாச்சமின்றி பரப்புகின்றன. இந்தப் பொய்களை செயலிழக்கச் செய்யும் விதத்தில்தான் ஜுலியன் அசாஞ்சே போன்ற சர்வதேச இதழியலாளர்கள் தங்கள் உயிரை யும் வாழ்வையும் பணயம் வைத்து பல உண்மைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் இன்றைக்கு ஆபத்தின் பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இத்தகைய சிறந்த இதழியலாளர்களிடமிருந்தும், உண்மைகளை வெளிக் கொணர பாடுபட்டு வரும் நபர்களிடமிருந்தும் முக்கியமான தகவல்களை விக்கிலீக்ஸ் போன்ற  நிறுவனங்கள் பெற்று இணைய தளங்களில் வெளியிட்டன. அமெரிக்க ராணுவம் நடத்திய கொடூரமான படுகொலைகளை வீடியோ ஆதாரங்களாக அவர்கள் இந்த உலக மக்களுக்கு வெளிப்படுத்த முடிந்தது.

போர் என்பது பொய்களை உற்பத்தி செய்யும். அந்தப் பொய்களை மக்களிடையே அம்பலப்படுத்திய ஜுலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் போன்றவர்களுக்கு இந்த உலகம் உண்மையிலேயே கடமைப்பட்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் எண்ணற்ற சூழ்ச்சிகளையும், சதிகளையும் இவர்கள் அம்பலப்படுத்தினார்கள்.  அதனால்தான், போர் என்பது பொய்களை எப்படியெல்லாம் உற்பத்தி செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது.

கியூபாவின் குவாண்டனாமோவில் எதற்காக இன்னும் அமெரிக்கா கொடிய சிறையை நடத்தி வருகிறது? அதை உடனடியாக மூட வேண்டும் என்று ஏன் மேற்கத்திய நாடுகள் குரல் கொடுக்க மறுக்கின்றன?ஏன் ஜுலியன் அசாஞ்சேவை முற்றாக  விடுதலை செய்ய வேண்டுமென்று குரல் கொடுக்க மறுக்கின்றன? ஜுலியன் அசாஞ்சே கொடுத்த தகவல்களை வெளியிட்டு தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்ட நியூயார்க்ஸ் டைம்ஸ், தி கார்டியன் போன்ற கார்ப்பரேட் செய்தி நிறுவனங்களின் நிர்வாகங்கள், ஏன் இப்போது அவரை விடுதலை செய்யுங்கள் என்று எழுத மறுக்கின்றன?

நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் உள்பட  உலகம் முழுவதும் இன்றைக்கு ஐரோப்பா வில் நடக்கும் ஒரு மோதலை இடைவிடாமல் சொல்வதைப் போல ஏன், ஐரோப்பா மற்ற நாடுகளைத் தாக்கும் போது, அமெரிக்கா மற்ற  நாடுகளைத் தாக்கும் போது சொல்லவில்லை?

இன்றைக்கு, போர்களுக்கு எதிராக –  போர் வெறி ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக – அவர்களது சூழ்ச்சிகளையெல்லாம் அம்பலப்படுத்திய விமர்சன செயற்பாட்டாளர்கள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டி ருக்கிறார்கள். மாறாக போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். போர்க்  குற்றவாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

எனவே நம்மைப் பொறுத்தவரை போர் என்பதே ஒரு பெரும் குற்றம்தான். இந்த  நிலையில் “போர்க் குற்றங்களைப்” பற்றி பேசு வதற்கு மேற்கத்திய ஆதிக்க சக்திகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு பேராசிரியர் விஜய் பிரசாத் உரையாற்றினார்.