டந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. ஒரு வாரத்துக்கும் மேலாக இப்போதுவரை உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்யாவைப் பல நாடுகள் கண்டித்தும் அது போரை நிறுத்தவில்லை.

ராணுவத் தாக்குதலைத் தொடங்கியபோது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், “இதுவொரு சிறப்பு ராணுவ நடவடிக்கை மட்டுமே. உக்ரைனில் ராணுவமயமாக்கலைத் தடுக்கவும், நாஸித்தன்மையை நீக்கவும் இந்நடவடிக்கையைத் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

உக்ரைனில் நாஸித்தன்மை இருப்பதாக புட்டின் குறிப்பிடுவது யாரைக் குறிக்கிறது? கடந்த வாரம் உக்ரைன் தேசியப் படையினர் ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தனர். அதில், உக்ரைனின் அசோவ் (Azov) படையினர் துப்பாக்கிக் குண்டுகளில் பன்றிக் கொழுப்பை தடவிக்கொண்டிருந்தனர்.

இவ்வகை குண்டுகள் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு முஸ்லிம் செச்சென்ஸுக்கு (Chechens) எதிராகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவை எதிர்க்கப் பொதுமக்களுக்கு அசோவ் படையினர் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தனர்.

அசோவ் படையினரின் வரலாறு என்ன?

அசோவ் தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவக் குழு. இதில் சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருமே தீவிர தேசியவாத, நவ நாஸி, வெள்ளைப் பேரினவாதச் சித்தாந்தம் கொண்டவர்கள். 2014ஆம் ஆண்டு மே மாதம் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

உக்ரைன் தேசியவாத வலதுசாரிகள், நவ நாஸி சித்தாந்தம் கொண்டவர்களால் அசோவ் உருவானது. இவர்கள் நாஸித்தன்மையுடன் செயல்பட்டது மட்டுமல்லாமல் புலம்பெயர் மக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். குறிப்பாக, ரோமா சமூகத்தினரைக் கடுமையாகத் தாக்கி அவர்களின் கருத்துகளையும் எதிர்த்துள்ளனர்.

உக்ரைனில் டோனெட்ஸ்க் (Donetsk) பகுதியில் ரஷ்யாவுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளை எதிர்த்தும் அசோவ் படையினர் சண்டையிட்டுள்ளனர். ரஷ்ய ஆதரவுக் குழுக்களிடமிருந்து துறைமுக நகரமான மரியுபோல் (Mariupol) மீட்கப்பட்ட பிறகு 2014ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி உக்ரைன் தேசியப் படையில் அசோவ் பிரிவினர் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டனர் அந்தச் சூழலில் அப்போதைய உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷெங்கோ (Petro Poroshenko) அசோவ் படையினர் சிறந்த வீரர்கள் எனப் புகழ்ந்து பேசினார்.

அசோவ் படையைத் தொடங்கியது யார்?

Patriot of Ukraine (உக்ரைன் தேசபக்தர்கள்) என்ற வலதுசாரி அமைப்பு 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. SNA எனப்படும் நாஸி சித்தாந்த அமைப்பு 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்விரண்டு அமைப்புகளின் தலைவராக பொறுப்பு வகித்த அண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky) என்பவர் அசோவ் படைக்கு தலைமை வகித்து வருகிறார்.

இதில் SNA அமைப்பு உக்ரைனில் உள்ள சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வெள்ளை இனக் குழுக்களுக்கு தலைமை வகிப்பதே உக்ரைனின் தேசிய நோக்கம் என 2010ஆம் ஆண்டில் பிலெட்ஸ்கி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் 2014ஆம் ஆண்டில் பிலெட்ஸ்கி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ராணுவப் படையில் அங்கம் வகிக்க முடியாது என்பதால் அசோவ் படையில் இருந்து வெளியேறினார். 2019ஆம் ஆண்டு வரை பிலெட்ஸ்கி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

பிலெட்ஸ்கியின் ஆதரவாளர்கள் அவரை ‘வெள்ளை ஆட்சியாளன்’ என அழைக்கின்றனர். 2016ஆம் ஆண்டில் நேஷனல் கார்ப்ஸ் கட்சி (National Corps party) என்ற தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட கட்சியை பிலெட்ஸ்கி தொடங்கினார். இதில் அசோவ் படையின் முன்னாள் வீரர்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்.

அசோவ் அமைப்புக்கு 2014ஆம் ஆண்டில் உக்ரைன் உள்துறை அமைச்சரிடம் இருந்தே நிதியுதவி கிடைத்தது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை எதிர்த்து சண்டையிட முடியாத அளவுக்கு உக்ரைன் ராணுவம் பலம் இல்லாமல் இருந்ததால் அசோவ் அமைப்புக்கு உக்ரைன் அரசே நிதியுதவி வழங்கியது. இதுபோக சில பெரும் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் அசோவ் அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வந்துள்ளனர்.

நவ நாஸி சித்தாந்தம் (Neo-Nazi ideology)

அசோவ் அமைப்பில் உள்ளவர்களில் 10% முதல் 20% வரை நாஸிக்கள்தான் என 2015ஆம் ஆண்டில் அசோவ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அண்ட்ரி டியசெங்கோ (Andriy Diachenko) தெரிவித்தார். அசோவ் அமைப்பில் அந்த அளவுக்கு நாஸி சித்தாந்தம் வேர் விட்டிருந்தது.

முழுமையாக நாஸி சித்தாந்தத்தை ஏற்கவில்லை என அசோவ் அமைப்பு கூறுகிறது. ஆனால், ஸ்வஸ்திகா உள்ளிட்ட நாஸி சின்னங்களை அசோவ் படையினரின் சீருடையில் காணலாம். சொல்லப்போனால், நவ நாஸி சித்தாந்தத்தின் சின்னமான Wolfsangel குறியீடுகளையும் அசோவ் சீருடையில் பரவலாக பார்க்க முடிகிறது.

அசோவ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் தங்களை நவ நாஸிக்கள் எனவும், தீவிர வலதுசாரி தேசியவாத சித்தாந்தவாதிகள் எனவும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.

2018ஆம் ஆண்டில் அசோவ் அமைப்பு தனது ரோந்துப் படையை அறிமுகப்படுத்தியது. வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது இந்த அமைப்பின் வேலை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இந்த கும்பலோ சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.

உலக அளவில் நவ நாஸி கும்பல்கள் அதிகளவில் உருவெடுத்துள்ளது உக்ரைனில்தான் என சர்வதேச அரசியல் நோக்காளர்கள் கூறுகின்றனர். அசோவ் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக 2016ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமை உயர் ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டினார்.

2015-16 ஆண்டுகளில் அசோவ் படையினர் தங்கள் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டி வீடுகள், கட்டிடங்களை கைப்பற்றியதாகவும், பொதுமக்களின் சொத்துகளை கொள்ளையடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டோன்பாஸ் பகுதியில் பிடித்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை பாலியல்வன்புணர்வு செய்து துன்புறுத்தியதாகவும் அசோவ் அமைப்பினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அசோவ் படையினர் நாஸித்தன்மை கொண்டுள்ளதால் அவர்களுக்கு பயிற்சி வழங்கமாட்டோம் என 2015ஆம் ஆண்டு கனடாவும், அமெரிக்காவும் அறிவித்தன. ஆனால், பெண்டகன் (Pentagon) கொடுத்த அழுத்தத்தால் அமெரிக்கா மட்டும் தடையை நீக்கியது. சொல்லப்போனால் அசோவ் படைக்கு ஆதரவும் பெருகியுள்ளது. நாஸி கருத்து கொண்ட பலரும் மூன்று கண்டங்களில் இருந்தும் அசோவ் படையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டில், அசோவ் ஆபத்தான அமைப்பு என ஃபேஸ்புக் (Facebook) அறிவித்தது. இதன்படி, அசோவ் அமைப்பை பாராட்டுவது, புகழுவது, ஆதரவு தெரிவிப்பதற்கு ஃபேஸ்புக் தடை விதித்தது. ஆனால், பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதலை தொடங்கியபோது அசோவ் மீதான தடையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது ஃபேஸ்புக்.

இதன்படி, அசோவ் படையை புகழுவதற்கும், பாராட்டுவதற்கும் ஃபேஸ்புக் அனுமதி அளித்துள்ளது. இதுவொரு தற்காலிக அனுமதி என ஃபேஸ்புக் கூறுகிறது. ஆனால், வன்முறையை தவிர அசோவ் படையிடம் பாராட்டுவதற்கு வேறென்ன இருக்கப்போகிறது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

மூலம்: Who are Ukraine’s far-right Azov regiment?
தமிழில்: புலிகேசி