ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, தான் வகிக்கும் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய.

ருவன்வெல்ல பகுதியில் இன்று (15.04.2022) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே இது தொடர்பான மீள் உறுதிப்படுத்தலை அவர் வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த 05 ஆம் திகதி மீளப்பெற்றுக்கொண்டதுடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில் சுதந்திரக்கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி சபாநாயகர் பதவியை துறக்கும், கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.
ஏப்ரல் 05 ஆம் திகதி மாலை ஜனாதிபதிக்கும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவியென்பது, சுயாதீனமானது. எனவே, அப்பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு ஜனாதிபதி கோரினார். இந்த கோரிக்கையை, இரு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதி சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

1. ஏப்ரல் மாத இறுதிவரைதான் பதவியில் நீடிப்பது –
2. அந்த காலப்பகுதியில் பிரதி சபாநாயகருக்கான வரப்பிரதாசங்கள் எதனையும் அனுபவிப்பதில்லை – இது தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் – அவ்வாறு அனுபவித்திருந்தால் அதற்கான கட்டணம் அறிவிடப்பட வேண்டும் –

மேற்படி இரு விடயங்களுமே நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டன.

அரசியல் நெருக்கடிக்கு மேலும் வழிவகுக்காமல், இணக்கப்பாட்டின் அடிப்படையில் பதவி துறக்கவே ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய முற்பட்டார்.

எனினும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியன் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டாரவை ஆளுங்கட்சி வளைத்து போட்டு, இராஜாங்க அமைச்சு பதவியை வழங்கியுள்ளதால் அரசுமீது சுதந்திரக்கட்சி கடும் சீற்றத்தில் உள்ளது.

அரசின் இந்த நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பதவி துறப்பு அறிவிப்பை மீண்டும் ஒருமுறை வெளியிட்டு, அதனால் ஏற்படும் அரசியல் நெருக்கடியையும் சுட்டிக்காட்டியுள்ளார் பிரதி சபாநாயகர்.

” மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆளுந்தரப்புக்கு புரியும் பாஷையிலேயே எடுத்துரைப்பதற்காகத்தான் அனைத்து பதவிகளையும் துறந்தோம். அதனை மீள் நினைவூட்டி – கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றும் அறிவிப்பு விடுக்கின்றேன்.

19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். அந்த அமர்வின்பின் பதவியில் இருக்கமாட்டேன். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதல் நாளிலேயே பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.

ஒரு உறுப்பினரின் பெயர் மட்டும் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.இருவர் போட்டியிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்துக்குள் அரசுக்கான ஆதரவு குறைந்துவருகின்றது. எனவே, எதிரணி சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் களமிறங்குவதற்கான சாத்தியம் அதிகம்.
இத்தேர்தலில் அரச தரப்பு பிரதிநிதி தோல்வியுற்றால் அது பெரும் பின்னடைவாக அமையும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதிலும் தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசை சூழ்ந்துகொள்ளும்.

அதேபோல நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் எப்படி ஆதரவு கிட்டும் என்பதற்கான ஓர் பயிற்சி ஆட்டமாக எதிரணி, பிரதி சபாநாயகர் தேர்வை பயன்படுத்தலாம்.

நாடாளுமன்றத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145
ஈபிடிபி – 02
தேசிய காங்கிரஸ் – 01
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01
எமது மக்கள் சக்தி – 01
ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01
முஸ்லிம் காங்கிரஸ் – 04
மக்கள் காங்கிரஸ் – 02
அலிசப்ரி (புத்தளம்) – 01
அரவிந்தகுமார் – 01
டயானா – 01

அரசுக்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக கடந்த 05 ஆம் திகதி 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

159 – 40 = 119

விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்.

119 – 01 = 118

 நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் அறிவித்தார். அரசுக்கு ஆதரவில்லை என்று தௌபீக் அறிவித்துள்ளார்.

 118 -02 = 116

 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய மூன்று எம்.பிக்களும், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அரவிந்த குமாரும் மௌனம் காக்கின்றார். (இவர்களின் ஆதரவு அரசுக்கு இல்லை என கருதினால். )
 116 -06 = 110

( அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும். இவர்கள் அரசுக்கு நேசக்கரம் நீட்டும் பட்சத்தில் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

 தற்போது சாந்த பண்டாரவும் இணைந்துள்ளார்.

 116+01 = 117
( 20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் கைவிட்டால், பிரதி சபாநாயகருக்கான தேர்வில் ஆளுங்கட்சி பின்னடைவை சந்திக்கக்கூடும்.

 இ.தொ.கா. உறுப்பினர்கள் அரசுக்கு நேசக்கரம் நீட்டாமல், நடுநிலை வகிப்பதுகூட ஆளுந்தரப்புக்கு வாக்கெடுப்பின்போது சாதகமற்ற நிலைமையையே உருவாக்கும்.

 ஏப்ரல் மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வு 22 ஆம் திகதி நிறைவுபெற்ற பின்னர், மே 4 ஆம் திகதியெ சைப மீண்டும் கூடும். அன்றைய தினமே பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.