தற்போது, பொதுமக்களின் தேவைகளும் அரசியல்வாதிகளின் தேவைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவே அமைந்துள்ளன. கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலையில் உள்ள மக்கள், அந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்தும் ஏனைய அரசியல்வாதிகளிடம் இருந்தும் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகளோ அரசியல் மாற்றங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால், வானளாவ உயரும் விலைவாசிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் மின் வெட்டுக்கும், பொதுமக்கள் தீர்வைத் தேடுகிறார்கள். அரசியல்வாதிகள், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதைப் பற்றியும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதைப் பற்றியும், விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், எதையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமையுள்ளவர்கள் என தம்மைக் காட்டிக் கொண்டு இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், நாட்டு மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது திகைத்து நிற்கிறார்கள்.

பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, நாடெங்கிலும் மக்கள் கொதித்தெழுந்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டங்கள், பொதுவாக சாத்வீகமனதாக இருந்த போதிலும், கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து, 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த ஒன்பதாம் திகதி, கொழும்பு, காலிமுகத் திடலில் சமூக வலைத்தள ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இரவு பகலாக இன்னமும் தொடர்கிறது. இதுவரை ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல அமைச்சர்களின் வீடுகள் முன்னும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அவர்களை வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, மார்ச் 31ஆம் திகதி, மிரிஹானையில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தின் முன்னால் வெடித்த போராட்டம், “உடனடியாகவே ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்ற கோஷத்துடன், அரசியல் வடிவத்தை எடுத்துக் கொண்டது. ‘கோட்டா கோ ஹோம்’ (கோட்டா வெளியேறு) என்ற அரசியல் சுலோகத்தையே இன்று, எங்கும் கேட்கவும் பார்க்கவும் கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் தான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தின் சிறிய கட்சிகளின் தலைவர்கள், ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து, அப்போதைய அமைச்சரவைக்கு பதிலாக சகல கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அன்றே கூறியிருந்தார்.

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதிருந்த ஜனாதிபதி, விமல் குழுவினரோடு இணங்கி மூன்றாம் திகதி தமது அமைச்சர்களை இராஜினாமாச் செய்யச் செய்து, ஏனைய கட்சிகளுக்கு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே, இந்த ஆலோசனையிலும் ஜனாதிபதி அதற்கு இணங்கியதிலும், மக்கள் நலன் சார்ந்து தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. விமல், கம்மன்பில ஆகியோர், ஏற்கெனவே மார்ச் மூன்றாம் திகதி அமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு இருந்தனர். சர்வகட்சி இடைக்கால அமைச்சரவை என்ற போர்வையில், அமைச்சரவைக்குள் புகுந்து கொள்வதே அவர்களது நோக்கமாக இருக்கலாம் என ஊகிக்கலாம்.

அதேவேளை, பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது தடுமாறும் ஜனாதிபதி, அந்த ஆலோசனையின் மூலம், மேலும் சிறிது காலத்துக்கு, மக்களை திசை திருப்பலாம் என்று நினைத்திருக்கலாம்.

இந்தக் கருத்தை ஆரம்பத்தில் முன்வைக்கும் போது, பிரதமர் பதவியைப் பற்றி எதையும் குறிப்பிடாத விமல்-கம்மன்பில குழுவினர், பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பதவி விலக வேண்டும் என்று கூறலாயினர். இடைக்கால அரசாங்கம் பற்றிய ஆலோசனையிலும் இந்த ஆலோசனையிலும் வலுப்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்தை ஓரளவு தணித்து, ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கமும் இருக்கலாம்.

அதன் மூலம், தாம் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றுக் கொள்வதே, விமல் குழுவினரின் நோக்கமாகவும் இருக்கலாம்.
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விமல் வீரவன்ச விலகிய நாளிலிருந்தும், கம்மன்பில, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகிய நாளிலிருந்தும், மஹிந்தவின் பெயரைக் கூறியே அரசியல் நடத்தி வந்தனர்.

2015ஆம் ஆண்டு மஹிந்த, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த போது “மஹிந்தவோடு எழுவோம்”என்ற கோஷத்துடன், ஆர்ப்பாட்டத் தொடர் ஒன்றை ஆரம்பித்து, தாமும் பயன் பெறும் வகையில் மீண்டும் மஹிந்தவை பதவியில் அமர்த்தவும், அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். இப்போது அவர்கள் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அதே மஹிந்தவை பலிகொடுக்க முயல்கின்றனர்.

அதற்காக, அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கப் போகும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மக்களின் ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவும் தற்போதைய அரசாங்கம் கவிழும் என்ற பயத்தில், தெற்கில் மக்கள் அபிப்பிராயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமை பிக்குகளும், பிரதமரைப் பலி கொடுத்துவிட்டு கோட்டாபயவின் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ள முற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அவர்களும் இப்போது, பிரதமர் நீக்கப்பட வேண்டும் என்கின்றனர். மஹிந்தவின் நெருங்கிய சகாவாக இருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெருமவும் அக்கருத்தைக் கூறி வருகிறார்.

தமது சகோதரனான பிரதமரோடு ஏனைய அமைச்சர்களையும் வெளியேற்றி, சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்தால், மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை உருவாகி, தம் மீதான கோபத்தைத் தணித்துக்கொள்ள ஜனாதிபதி நினைக்கிறார் போலும்! எனவே, அவரும் இப்போது பிரதமரை வெளியேற்றும் கருத்தை, சிறிது சிறிதாக ஏற்று வருகிறார்.

இதனிடையே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம் ஜனாதிபதியை சர்வாதிகாரியாக்கிய 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்றும் எனவே இதனை இரத்துச் செய்து, பொருத்தமான திருத்தங்களுடன் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார். அந்தக் கருத்தும் இப்போது வெகுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை ஏற்றுள்ளது.
தம்மை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு, ஜனாதிபதியின் ஆதரவு இருப்பதாகக் கருதும் பிரதமர், இந்த 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய ஆலோசனையைத் தமக்குச் சாதகமாக பாவிக்க முயல்கிறார்.

அந்தத் திருத்தம், மீண்டும் கொண்டுவரப்பட்டால் ஜனாதிபதியின் அதிகாரம் குறையும். எனவே அந்தத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதை, தாமும் ஆதரிப்பதாக மஹிந்த அறிவித்துள்ளார். இது, தமக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு மஹிந்த கொடுத்த பதிலடியாகும்.

மஹிந்த இப்போது மிகவும் பலவீனமாகவே இருக்கிறார். சிலவேளைகளில் நடந்து செல்லவும் அவருக்கு மற்றொருவரின் துணை தேவையாக இருக்கிறது. இந்தநிலையில், அவர் மரியாதையுடன் பதவி விலகிச் செல்லாதிருக்க மற்றொரு காரணமும் இருக்கிறது. அவரது மகன் நாமல் ராஜபக்‌ஷவின் எதிர்காலமே அதுவாகும்.

நாமல் வளர்ந்து ஜனாதிபதியாவதற்கு உரிய வயதை அடையும் வரை, ஆட்சியைத் தம் கையில் வைத்திருக்கவே மஹிந்த 2010ஆம் ஆண்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், இரண்டு முறை மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாகலாம் என்றிருந்த வரையறையை நீக்கினார். இந்த நிலையில், தாம் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டால், தமது மகனின் கனவு பாழாய்ப்போகும் என்று அவர் நினைக்கிறார் போலும்.

எனவேதான் அவர் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, பிரதமர் என்ற வகையில் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்ள முயல்கிறார். அந்த வகையில், இப்போது பொருளாதார நெருக்கடியானது அதிகார பீடத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தின் உட்பூசலாகவும் மாறியுள்ளது.

பொருளாதார பிரச்சினைகள் காரணமாகக் கிளர்ந்தெழுந்த மக்கள், ‘கோட்டா வெளியேறு’ என்று ஆட்சி மாற்றத்தைக் கேட்பதால், இது போன்ற அரசியல் மாற்றங்களில் அர்த்தம் இருப்பதாகத் தெரியலாம். எனினும், இன்று நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கமோ, காபந்து அரசாங்கமோ 19ஆவது அரசியலமைபபுத் திருத்தமோ உடனடித் தீர்வைத் தரப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

இவற்றில் எந்த ஆலோசனையை நிறைவேற்றினாலும் நாளாந்தம் உக்கிரமடையும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினை காரணமாக உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையோ உயரும் விலைவாசியையோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டையோ கட்டுப்படுத்த முடியாது; மக்கள் அநாதரவாகவே உள்ளனர்.