அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணத்தை அச்சிட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து நேற்று நாட்டு மக்களிடத்தில் விளக்கமளித்தார். அப்போது அவர், “அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணத்தை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது மேலும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

இலங்கை 2021-ல் 1.2 டிரில்லியன் ரூபாய் அச்சிட்டுள்ளது. இதையொட்டி 2022 -ம் ஆண்டின் முதல் காலாண்டில் 588 பில்லியன் ரூபாய் அச்சிட்டுள்ளது. டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2021-க்கு இடையில், இலங்கையின் பண விநியோகம் 42% அதிகரித்துள்ளது.

இனி வரப்போகிற சில மாதங்கள், உங்களுக்கும், எனக்கும் வாழ்க்கையில் மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அனைத்து விதமான எரிபொருள் விற்பனையிலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2020-2021 ஆண்டில் மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.