இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

11.33: உக்ரைனுக்கு எதிரான போரில் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அந்நகரில் உள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ஈடுபட்டு வரும் நிலையில், 256 வீரர்கள் சரணடைந்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

04.20: பிரான்சில் நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாடினார்.

உக்ரைனில் ரஷியாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஹிட்லர் குறித்து 1940ம் ஆண்டில் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தில் சார்லி சாப்ளினின் பேசும் இறுதி காட்சி வசனத்தை ஜெலன்ஸ்கி மேற்கோள் காட்டினார்.

மனிதர்களின் வெறுப்பு மறைந்து விடும், சர்வாதிகாரிகள் இறந்து விடுவார்கள், மேலும் அவர்களிடம் இருந்த அதிகாரம் மீண்டும் மக்களுக்கு திரும்பி செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

நமது காலத்திலும் அமைதி இல்லை என்பதை நிரூபிக்க ஒரு புதிய சாப்ளின் தேவை என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

02.50: மரியுபோல் பகுதியின் கட்டுப்பாடு தற்போது சமநிலையில் உள்ளதாகவும், எனினும் அந்த பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருவதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

01.30: உக்ரைனில் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷியா தனது அண்டை நாடான் உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து மொத்தம் 226 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூகே தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 75 பேர் இறந்தனர் மற்றும் 49 பேர் காயமடைந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

12.40: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

அப்போது மரியுபோல் மற்றும் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம் உள்பட தற்போதைய போர் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

உக்ரைன் படைகளுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவை என்ற ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேக்ரோன்,

மனிதாபிமான உதவிகளை வழங்குவது போல, ஆயுத விநியோகமும் தொடரும் என்று உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17.05.2022

21.30: நேட்டோ அமைப்பில் ஸ்வீடன், பின்லாந்து சேரும் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியும் என அமெரிக்கா நம்புவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளிங்கனை சந்திக்க, துருக்கி வெளியுறவு மந்திரி வாஷிங்டன் சென்றுள்ளார்.

20.00: ரஷியா, உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் துருக்கியின் கப்பல் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை துருக்கியின் வர்த்தக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு போக்குவரத்துக்கான தடை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட சவால்களை துருக்கி அரசு சந்தித்து வருகிறது. இதுதொடர்ந்தால் சிறிய கப்பல் நிறுவனங்களை மூடவேண்டிய அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

15.45: ரஷிய படைகள் அந்நாட்டின் மரியுபோல் நகரை கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றின. அங்கிருந்த உருக்கு ஆலையில் இருந்து 260 உக்ரைன் வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என உக்ரைன் தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் அரசின் இந்தக் கூற்றை ரஷியா மறுத்துள்ளது. இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், உக்ரைனின் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்த 265 வீரர்கள் சரணடைந்தனர். அவர்களில் பலர் காயம் அடைந்திருந்தனர் என தெரிவித்துள்ளது.

14.08: நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் முயற்சிக்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது என அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். நோட்டோ கூட்டமைப்பில் ஏதேனும் புதிய நாடுகள் இணைய வேண்டுமென்றால், அதற்கு தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படும் நிலையில், துருக்கி ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது.

09.59: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைகள் அந்நாட்டின் மரியுபோல் நகரை கடந்த சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றின.

இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அங்கிருந்த உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் அந்த ஆலையில் இருந்து 260 உக்ரைன் வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் 53 வீரர்கள் கடுமையான காயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

04.40: ரஷியப் படைகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 42 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு பள்ளி, ஹோட்டல் மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

04.10: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் நடைபெற்ற சண்டையில் சிக்கி பலத்த காயம் அடைந்த 50க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அன்னா மல்யார் தெரிவித்தார்.

03.40: ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சீவியர்டோனெட்ஸ்க் பகுதியில் கடும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் என்று லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கார்கிவ் பிராந்தியத்தில் இருந்து ரஷிய படைகளை பின்வாங்க செய்த தமது ராணுவத்தினருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரேனியர்கள் சார்பாகவும், என் சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று தமது காணொலி செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

01.20: நேட்டோ அமைப்பில் சேரும் நடவடிக்கையில் பின்லாந்துடன் இணைந்து ஸ்வீடன் ஈடுபட்டு வருகிறது.

இதை ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் உறுதிபடுத்தி உள்ளார். தனது நாடு நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த அணி சேரா கொள்கையை கைவிட்டு, நேட்டோ அமைப்பு கூட்டணியில் சேர விண்ணப்பிக்கும் என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில் நேட்டோ அமைப்பில் ஸ்வீடன், பின்லாந்து சேர்வதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குர்திஷ் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதில் இரு நாடுகளும் மிகவும் மெத்தனமாக செயல்படுவதால் அவற்றை நேட்டோவில் அனுமதிக்க கூடாது என்றும் துருக்கி தெரிவித்து வருகிறது.

12.10: மரியுபோல் நகரில் மற்றொரு புதைகுழி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

மங்குஷ் கிராமத்திற்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கல்லறை இரண்டு அகழிகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

மரியுபோல் பகுதியில் ரஷிய படையினர் நடத்திய இனப்படுகொலையை தொடர்பான அனைத்து குற்றங்களையும் நாங்கள் தொடர்ந்து பதிவு செய்கிறோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.