நடந்து முடிந்த சம்பவங்கள் ஒரு முன்னோட்டம் மட்டுமே. எமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் அது முழு திரைப்படமாக அரங்கேறுவதை தவிர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அழிவுகளோடு நாம் ஒன்றிணையாவிட்டால் மோசமான நிலையை சந்திக்க நேரும். நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி எமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.தீர்மானம் எமது கையிலே உள்ளது நாடாளுமன்றத்தில் 225 பேரும் இதனைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

83 ல் நடைபெற்ற அழிவிற்குப் பின்னர் மிக மோசமான அழிவு இதுவாகும். அந்த நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எமது செயற்பாடுகள் இந்த ஆர்ப்பாட்டங்களின் பொதுவான அடிப்படையாக உள்ளது.பிள்ளைகள் இல்லாத நாடு போன்று நாம் செயற்பட்டு வருகின்றோம். சொத்துக்கள் போனால் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது. எமது செயற்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது.எமது பிள்ளைகள் 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ளனர் அவர்கள் சுதந்திரமாக அதனை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது கடமையாகும்.

ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். மக்கள் மாற்று ஏற்பாடுகளுக்கு செல்ல முடியும்.