பழ வகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்திலுள்ள சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் இனிப்பு சுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

சத்துக்கள்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது தவிர மாவுச்சத்து, புரதம்,கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

இலைகள்

சீத்தாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீத்தாப்பழ இலை அருமருந்து. சீத்தாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள்

சீத்தாப்பழத்தோடு உப்பு கலந்து பருக்கள் மேல் பூசிவர பருக்கள் பழுத்து உடையும். மேலும் இந்த பழத்தின் இலைகளை அரைத்து பருக்களால் ஏற்பட்ட புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

முடி பிரச்சனை

சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி, அதில் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். இரண்டு மாவுகளையும் சம அளவு எடுத்து பயன்படுத்த வேண்டும். சீத்தாப்பழ விதை பொடியோடு, கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும். சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும்.

உற்சாகத்தை தூண்டும்  

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடி கொண்டு டீ தயாரித்து அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

எலும்பு பலமடையும்

சீத்தாப்பழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதை சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.