தளம்
Breaking News

அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டேன்.! ஜனாதிபதி

இலங்கை மத்தியவங்கியின் 17 வது ஆளுநராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நந்தலால் வீரசிங்கவை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக மவ்ரட்ட வாராந்த வெளியீடு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நந்தலால் வீரசிங்கவை நீக்கி அவ்விடத்திற்கு தினேஷ் வீரக்கொடி என்பவரை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தனது நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படாதுவிட்டால் பொருளாதாரம் தொடர்பில் தன்னால் சிலபல முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியாது போகும் பட்சத்தில் தான் பிரதம மந்திரி மற்றும் நிதியமைச்சர் பதவிகளிலிருந்து ராஜனாமா செய்து கொள்ளப்போவதாக அக்கடிதத்தில் மிரட்டப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்த வேண்டுதலை ஜனாதிபதி முற்றாக நிராகரித்துள்ளதாகவும் எந்தவொரு நிபந்தனையிலும் தான் நந்தலால் அவர்களை பணிநீக்கம் செய்யப்போவதில்லை எனவும் கோத்தபாய திட்டவட்டமாக பதிலளித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களை ஆதாரம்காட்டி அச்செய்தில் மேலும் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும், அப்பதவியினை பாரமேற்பதற்கு பலர் அச்சம் தெரிவித்திருந்த நிலையிலும் டாக்டர் நந்தலால் வீரசிங்க அவர்கள் மந்தியவங்கியை பாரமெடுத்திருந்தார். அவர் அவ்வாறு பாரமெடுக்கும்போது விடுத்திருந்த பிரதான நிபந்தனை யாதெனில், தனது கருமங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்கக்கூடாது என்பதாகும்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சில வாரங்களுக்கு பின்னர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் தனது கருமங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆழுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளரின் பூரண ஆதரவு கிடைக்கப்பெறுவதாக தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் தனது தீர்மானங்களை எடுப்பதற்கு நந்தலால் வீரசிங்க நீக்கப்படவேண்டும் என பிரதமர் திடீரெனத் தெரிவித்துள்ளார்.

இங்குதான் பழையகுருடி கதவை திறடி என ரணில் கதவை தட்டுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. நல்லாட்சிக்காலத்தில் அன்றைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சேபனையையும் பொருட்படுத்தாது தனது நண்பனான அர்ஜூனா மகேந்திரனை மத்திய வங்கியின் ஆழுநராக நியமித்ததும் அவர் ஒரிரு மாதங்களிலேயே பிணைமுறி மூலம் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கியிலிருந்து தனது மருமகனின் கம்பனியினூடாக திருடியதும் இடம்பெற்றது. இந்த மாபெரும் திருட்டு மோசடியே தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவினருக்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு துரும்பாக அமைந்திருந்தது.

எனவே அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன் கதிரையில் அமர்ந்த ஒருவரை நீக்கிவிட்டு ரணில் விக்கிரமசிங்க கதிரையில் அமர்த்த முன்மொழியும் தினேஷ் வீரக்கொடி என்ன நிபந்தனைகளுடன் கதிரைக்கு கொண்டுவரப்படவுள்ளார் என்பது கேட்கப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.

இன்று கோப் கமிட்டியின் முன் அளிக்கப்படும் வாக்குமூலங்களில் மத்தியவங்கியில் இடம்பெற்றுள்ள சகலவிதமான முறைகேடுகளும் அம்பலமாகும் அபாயம் தெரிகையில், நந்தலாலை நீக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோருவதன் நோக்கங்கள் புரிந்து கொள்ள முடியாதவையல்ல.

இலங்கையில் போர்க்குற்றங்களைப்போன்றே நிதிமோசடிக்குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டுமென்ற கோஷம் வலுப்பெற்றுவருகையில் விசாரணைகளில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் ஆணைகளுக்கு அடிபணிய மறுக்கும் உத்தியோகித்தர்களை பணிநீக்கம் செய்வது மீண்டும் நாட்டை பழைய மோசடி காட்டாட்சிக்கு இழுத்துச் செல்லவே என்பது தெளிவாக புரிகின்றது.

Related posts

ஜனாதிபதியை பதவி விலகுமாறு நிபந்தனை விதிக்க இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை..!

Fourudeen Ibransa
2 years ago

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை…!

Fourudeen Ibransa
1 year ago

ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.!

Fourudeen Ibransa
1 year ago