தளம்
கட்டுரை

 நாட்டின் எரிபொருள் நெருக்கடி என்பது இப்போதைக்கு முடிவுக்கு வராது.!

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது.

ராஜபக்‌ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும் அளவுக்கான இலக்கை எட்டியது. ஆனால், முதன்மைக் கோரிக்கையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்கிற விடயம் இலக்கை அடைய முதலே போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கின்றது.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி பொருளாதார நெருக்கடிகள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நிகழ்ந்த ஒன்று. அங்கு ஆட்சி அதிகார மாற்றம் என்பது குறிக்கோளாக இருந்தது. அதன்மூலம், மோசமடைந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரம் சீர் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை சார்ந்தது.

ஆனால், கோட்டா தவிர்ந்த ஏனைய ராஜபக்‌ஷர்களை ஆட்சியில் இருந்து அகற்றினாலும், ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரக் கட்டமைப்பில் இருந்து அவர்களை இன்னமும் நீக்க முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்ற போதிலும், அவரினால் அமைச்சரவைக்குள் தீர்மானங்களை எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றது.

மாறாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இழுப்புக்கு இசைந்து கொடுக்கும் நிலைகளுக்குள்ளேயே அவர் இருக்கின்றார். அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பது ராஜபக்‌ஷர்களின் பெயரினால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. அதன் அதிகாரங்கள் எல்லாமும் இன்னமும் பசில் ராஜபக்‌ஷவிடம்தான் இருக்கின்றது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மையோடு இருக்கின்ற தரப்பு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே. அதுதான், ரணில் அரசாங்கத்தின் ஆதாரம். அப்படியான நிலையில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திடம் பாரப்படுத்தும்- பகிரும் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வேலைத்திட்டங்களில் ராஜபக்‌ஷர்கள் ஈடுபடுகிறார்கள்.

அது முடியாமல் போனாலும், 21ஆவது திருத்தத்தின் சரத்துகளில் குளறுபடிகளைச் செய்து, அதனை வலுவிழக்கச் செய்யும் வேலைகளில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதன் மூலம்தான், ஆட்சி அதிகாரம் குறித்த தங்களது கனவை மீண்டும் அடையாலாம் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் சோபையிழப்பது என்பது ஆபத்தானது.

ரணில் பிரதமர் பதவியை ஏற்றது முதல், இரண்டு தடவைகள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டார். அதுபோல, பாராளுமன்றத்திலும் நாட்டின் நிலைமைகளை விளக்கி நீண்ட உரைகளை நிகழ்த்தியிருக்கின்றார்.

இந்த உரைகளில் எல்லாமும் அவர் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட விடயங்கள், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது. நாட்டின் எரிபொருள் நெருக்கடி என்பது இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதாகும். அத்தோடு, இந்த நெருக்கடிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் தீர்க்க தரிசனமில்லாத பொருளாதார திட்டங்களே காரணங்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ரணில் உணவுப் பஞ்சம், எரிபொருள் நெருக்கடி பற்றி திரும்பத் திரும்ப கூறி மக்களை அச்சமூட்ட நினைக்கிறார். அதுபோல, ஒரே நாளில் அல்லது குறுகிய காலத்துக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கடக்க முடியாது என்றும் கூறி மக்களை அதற்காக தயார்ப்படுத்தத் தொடங்கிவிட்டார். இதனால், மக்கள் அதனை உள்வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பொருளாதார நெருக்கடியை யாராலும் குறுதிய காலத்துக்குள் கடந்துவிட முடியாது. எனவே, ரணிலின் உரைகளை நோக்கி இசைவதுதான் வழி என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ராஜபக்‌ஷர்கள் ஏற்படுத்திவிட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டக்களம் வந்த மக்கள், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி குறுதிய காலத்துக்குள் தீர்க்கப்பட முடியாதது என்று உணரத் தொடங்கியதும், தங்களது பொருளாதார -வாழ்வாதார கட்டங்களைக் காப்பாற்றுவது சார்ந்து சிந்திக்கத் தலைப்படுவது இயல்பு. அதனால், நீண்டு செல்லும் போராட்டக்களத்தில் அவர்களினால் பங்களிக்க முடியாமல் போகும். அதுவும்கூட தென் இலங்கை எழுச்சியை கலகலக்க போதுமானது.

எதிர்க்கட்சித் தலைவர் செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தற்போது கோட்டாவை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை. அது, கலைந்து போகத் தொடங்கிவிட்டது என்று கூறினார்.
அத்தோடு, படித்த சமூகம் நாட்டைவிட்டு வெளியேறவும் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார். சாதாரண மக்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்து அல்லாடுவதும், அறிவார்ந்த சமூகம் நாட்டைவிட்டு வெளியேறுவதுமேகூட போராட்டக்களத்தினை கலைக்க போதுமானது.

அந்த வகையில், ரணில் பதவியேற்றது முதல், பொருளாதார நெருக்கடி, குறிப்பாக உணவுப் பஞ்சம் குறித்த அச்சுறுத்தலை விடுத்து மக்களை போராட்டக்களத்திலிருந்து அகன்றுபோக வைத்திருக்கிறார்.

ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி போராட்ட வடிவம் பெற்று ஐம்பது நாள்களைத் தாண்டி நீடித்தமை என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஏனெனில், ஆரம்பத்தில் அந்தப் போராட்டம் அதற்கான எந்த தன்மையையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், காலி முகத்திடல் போராட்டக்களம் திறந்ததும் போராட்டம், ஐம்பது நாள்கள் வரை நீண்டது. அதற்கான ஓர் ஓர்மத்தை மக்களிடம் கொடுத்தது.

அதுதான், தென் இலங்கையில் மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எல்லாமும் இலங்கையில் இதுபோன்று ஐம்பது நாள்கள் நீண்ட ஜனநாயக போராட்டம் இல்லை என்று அறிவிக்கவும் காரணமானது. அவர்களின் கண்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாய்மாரின் 1,600 நாள்களைத் தாண்டி நீளும் போராட்டங்கள் படவில்லை.

பொருளாதார நெருக்கடிகளால் எழுந்த போராட்டமொன்று அதன் தன்மைகளில்தான் பயணிக்கும். அந்தப் போராட்ட வடிவத்திடம் அரசியல் உரிமைகள் சார்ந்த அறிவோ, எதிர்பார்ப்போ இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதுதான் காலி முகத்திடல் போராட்டக் களத்திலும் பிரதி பலித்தது. ஆட்சி மாற்றம் மட்டுமே அந்தப் போராட்டத்தின் குறிக்கோள். அது அப்படித்தான் தன்னைக் காட்சிப்படுத்தியது.

அங்கு இனமுரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சிந்தனைகளோ எதிர்பார்ப்புகளோ எழவில்லை. அப்படியான நிலையில், காலி முகத்திடல் போராட்டக்களத்திடம் அதனை எதிர்பார்ப்பது காற்றில் பொரி விற்கும் நிலைக்கு ஒப்பானது.

ஆனால், தென் இலங்கையின் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான எழுச்சியை ஒரு சந்தர்ப்பமாக கையாளுவது சார்ந்து தமிழ்த் தலைமைகள் செயற்பட்டிருக்கலாம். அது, பெரியளவில் நிகழவில்லை. குறிப்பாக, தமிழ்த் ​தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனைத் தவிர அந்தப் போராட்டக்களத்தை பயன்படுத்துவது குறித்து யாருமே சிந்திக்கவில்லை. அதிலும், அந்தப் போராட்டத்திற்கும் வடக்கு – கிழக்கு மக்களுக்குமே சம்பந்தமில்லை என்பது மாதிரியான தோற்றப்பாட்டைப் பேணவே சில தமிழ்த் தலைவர்கள் முயன்றார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக எழுந்த போராட்டக்களம், அதன் இயல்புக்கு ஏற்ற மாதிரியே அடங்கவும் தொடங்கிவிட்டது. அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் மிக அவசியமாக இருந்தது. குறிப்பிடத்தக்க இலக்கையும் எட்டியது. அத்தோடு, அது கலைந்து போனது என்று எதிர்காலத்தில் பதிவு பெறும்.

Related posts

எங்கெல்லாம் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவோ அங்கெல்லாம் பயங்கரவாதமும், பயங்கரவாத நடவடிக்கைகளும் முளைத்திடும் .!

Fourudeen Ibransa
3 years ago

எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது.!

Fourudeen Ibransa
3 years ago

இலங்கையின் வெளிநாட்டு கடன் அதிகரித்து கொண்டு வரும்போது அரசாங்கம் தூங்கி விட்டது .!

Fourudeen Ibransa
2 years ago