தளம்
இலங்கை

முடிவுக்கு வரட்டும் தமிழ்நாடு

மிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர்கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல் இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும் அமர்த்தப்பட்டார்கள். மைசூர் மாநிலத்தின் மேனாள் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் இந்த வகையில் சேர்ந்தவர். இப்படியானவர்களால் மாநில அரசுக்குச் செலவீனங்களைத் தவிர வேறு பிரச்சினைகள் எழவில்லை. 

அடுத்த கட்டத்தில் அமர்த்தப்பட்ட ஆளுநர்கள் அவரவர்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உள்கட்சி சண்டையால் கட்டம் நகர்த்தப்பட்டவர்கள் (அ) நீண்ட சர்வீஸுக்கு ஓய்வூதிய பயனளிப்பதுபோல் வேறு மாநிலங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டார்கள். இந்த இரு வகைப்பட்டவர்களும் தங்களது நீண்ட அரசியல் அனுபவங்களால் பிரச்சினைகள் எவற்றையும் உருவாக்கவில்லை.

ஒவ்வொன்றும் ஒருவிதம் 

அதற்குப் பின் உருவானதே ஆளுநர்கள் பேயாட்டம். ஒன்றிய அரசில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு மாற்றாகச்  செயல்பட்ட மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்புவதற்குப் பரிந்துரைக்கலாயினர். நெருக்கடிநிலையின்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த கே.கே.ஷா அதற்கு முந்தைய இரவில் அரசு விழாவில் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிவிட்டு அன்றிரவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிக்கை அனுப்பிய வரலாற்றுக்கு உரியவர். விளைவு கலைஞர் மு.கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பேயாட்டத்திற்கு உட்படாத ஒன்றிய அரசிற்கு ஊழியம் செய்ய முன்வராத ஆளுநர்கள் பந்தாடப்பட்டனர் (அ) பதவி நீக்கப்பட்டனர். மாநில அரசைக் கலைப்பதற்குப் பரிந்துரைக்க மாட்டேன் என்று கூறிய பர்னாலாவிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. ராஜினாமா செய்ய மறுத்த பட்வாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 

ஆளுநர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள காப்புக் காட்டை கழிப்பறையாகப் பயன்படுத்தியவர் ஒருவர். பாதுகாக்கப்பட்ட விலங்குகளை அடித்து மான் கறி விருந்து வைத்தவர் ஒருவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் அரசமைப்புச் சட்டம் புரியாமல் அமைச்சரவை ஒப்புதலின்றி கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்து குட்டு வாங்கியவர் ஒருவர். நர்சரி பள்ளி முதல் புடவைக் கடைகள் வரை திறப்பு விழாவிற்குச் சென்றதுடன், தான் நடத்திவந்த அறக்கட்டளைக்கு நன்கொடை பெற்றவர் ஒருவர். 

இப்போது இந்த வகைகளிலிருந்து மேலும் ‘மேம்படுத்தப்பட்ட கோமாளிகள்’ அனுப்பப்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் பாரம்பரியமோ சட்ட ஞானமோ கிடையாது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தயவில் பதவி வாங்கி வருபவர்கள் அங்கிருந்து வரும் சிக்னல்களுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள். தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் என்பதையெல்லாம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. 

நீங்கள் தபால்காரரா? 

ஆடுவது நாடகமென்றாலும் அவ்வப்பொழுது இவர்கள் தங்களை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். அட்சரம் அறிந்துகொள்ள ஆசிரியர்களை அமர்த்தியுள்ளதாக பேட்டி கொடுக்கும் அவர்கள், திருக்குறளுக்கு உரை எழுதிய ஜி.யு.போப்பைக்கூட விமர்சிக்க தயங்குவது இல்லை. சனாதனத்திற்குப் புது உரை எழுதும் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் ஏதுமில்லை என்று தங்களது அறியாமையைக் காட்டிக்கொள்ளவும் தயங்குவது இல்லை. தமிழ்நாடு என்று அழைக்காமல் தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்; அப்பொழுதுதான் பிரிவினைவாதம் தலையெடுக்காது என்பது அன்னாரின் சமீபத்திய கண்டுபிடிப்பு. 

பிஹாரிலிருந்து வந்த மனிதருக்கு அந்த மாநிலத்தின் பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? விஹார் என்பது புத்த மடங்களைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பெயர் திரிந்துதான் பிஹார் என்று ஆனது.  இந்து சனாதனத்தைப் புகழ்ந்துவரும் அவர் தனது மாநிலத்தின் பெயரை மாற்ற பரிந்துரைப்பாரா? 

இந்தியக் காவல் பணியில் சேவை புரிந்த ஆர்.என்.ரவிக்குக்  கட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவரது சாவி உள்துறை வசம் உள்ளது. அமைச்சரவை அறிவுறுத்தியும் குற்றவாளிகளின் மன்னிப்பு மனுக்களில் கையெழுத்திட மறுத்த அவரை உச்ச நீதிமன்றம் கண்டித்ததை யாவரும் அறிவர். வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்னால் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து மனுக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அவரை உச்ச நீதிமன்றம் ”நீங்கள் தபால்காரரா?” என்று கேட்டது. 

ஆளுநர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), ஆரிப் கான் (கேரளம்), தமிழிசை சௌந்தரராஜன் (தெலுங்கானா) இம்மூவருக்கும் ஒற்றுமை ஒன்று உண்டு. அவர்கள் சேர்ந்து இசைக்கும் கோஷ்டி கானத்திற்குப் பக்கவாத்தியம் வாசிக்க பாஜக உண்டு. அவரவர் மாநிலங்களிலுள்ள பெரும்பான்மை பெற்ற கட்சிகளின் அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதுதான் மூவருக்கும் முதல் அஜெண்டா. சட்டப்பேரவைகள் இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது, மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களில் அவர்களை ‘வேந்தர்கள்’ என்று அறிவித்திருப்பதனால் பல்கலைக்கழகங்களின் உள்விஷயங்களிலும் தலையிட்டு தங்களது ராஜதர்பாரை நடத்துவது, போதாதென்று அவர்களது காவிக் கட்சி விசுவாசத்தைக் காண்பிப்பதற்காக அவ்வப்பொழுது கூட்டங்களில் முத்து உதிர்ப்பது… மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற கவலையோ, கூச்சமோ துளியும் கிடையாது

Related posts

மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது!

Fourudeen Ibransa
3 years ago

‘நியாயமான அளவில் நிலையான மின் கட்டணம் அவசியம்’

Fourudeen Ibransa
2 years ago

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.!

Fourudeen Ibransa
3 years ago