தளம்
கட்டுரை

றிஷாத்தை தொடரும் அரசியல் நெருக்கடிகள்.!

எம்.எஸ்.தீன் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீன் இலங்கையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கொள்ளாத் நெருடிக்கடியில் உள்ளார். அடிப்படையில் இவருக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு பலத்த போட்டிக் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ந்து கொண்டு வந்த நிலையில், றிஷாத் பதியூதீன் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றதொரு அரசியல் சக்தியாகவும் மாற்றமடைந்தார். றிஷாத் பதியூதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பௌத்த இனவாதிகள் முன் வைத்திருந்தார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கள்தான் தேசிய அரசியலில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய அத்திவாரமாகவும் அமைந்தது.

றிஷாத்; பதியூதீன் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலரும், அவரது சட்டத்தரணிகளும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும், றிஷாத்; பதியூதீனின் கைது குறித்தோ, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்காதிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர்ரஹ்மான், நளின் பண்டார போன்றவர்கள் பாராளுமமன்றத்தில் அடிக்கடி றிசாட் பதியூதீனுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர் குறித்து பேசாமல் இருப்பதற்கு பிரதான காரணம், அவர்கள் அமைச்சர் பதவிகளில் கண்வைத்துள்ளார்கள். றிஷாத் பதியூதீனுக்காக குரல் கொடுக்கும் போது அமைச்சர் பதவி கிடைக்காது போய்விடும் என்று எண்ணுகின்றார்கள். அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லி பெருமைப்படும் நிலையில் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.

மாறாக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று நிருபிப்பதற்கே செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஹ்மான் இஸ்ஸாக், அப்துல் ரஹீம் அலிசப்ரி ஆகியோர்கள் மிகவும் தெளிவாக தாங்கள் அரசாங்கத்தினோடு இணைந்து கொள்வதற்கு முடிவு செய்து விட்டோம். அதில் மாற்றங்களில்லை என்று உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் தாம் கட்சியோடு உள்ளதாகவும், கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்யமாட்டேன் என்றும், என்னுடைய தலைவன் றிஷாத் பதியூதீன்தான் என்றும் உயர்பீடத்திலும், கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அவரது நடவடிக்கைகளில் அத்தகையதொரு உறுதிப்பாட்டைக் காண முடியாதுள்ளது. அவர் கட்சியோடும், அரசாங்கத்தோடும் பயணிப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார். தலைவரின் விடுதலைக்காக தந்திரம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
ஆயினும்இ அவரது தந்திரம் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமென்பதாகவே அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் தமது பேச்சு திறமையை காட்டி பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளார். அவர் தன்னை றிஷாத் பதியூதீனின் விசுவாசியாகக் காட்டுவதனை அதிகார தரப்பினர் விரும்பவில்லை. அவர் ஆட்சியாளர்களின் விசுவாசியாக மாத்திரம் இருக்க வேண்டுமென்பதே ஆளும் தரப்பினரின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றத்தில் தலைவருக்காகவும், சமூகத்திற்காகவும் பேச முடியாத நிலையில் இருக்கின்றார்.

அதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும், தாங்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் என்று காட்டுவதற்கே தயாராகி உள்ளனர்.

இதனால்தான் உதயகம்மன்விலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் உதயகம்மன்விலவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இதன் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பும் தம்மோடில்லை என்று றிஷாத் பதியூதின் உணர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் அதில் இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பிரமுகர்களாகவே இருந்து வருகின்றார்கள். இதனால், கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளார்கள். சமூகத்தில் ஏதோவொரு அடிப்படையில் பிரபல்யம் பெற்றவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவும், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிடவும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் வந்துள்ளன. அவ்வாறு தேர்தலுக்காக கட்சியில் இணைந்து கொண்ட பிரமுகர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அல்லது றிசாட் பதியூதீன் வகித்த அமைச்சர் பதவிகளின் மூலமாக உயர்பதவிகளை வகித்து, அதன் மூலமாக வளர்ந்ததன் பின்னர் றிஷாத்; பதியூதீனை பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து செயற்பட்டும் வருகின்றார்கள்.

பிரமுகர்களை இணைத்துக் கொள்வதனால் ஏற்பட்டுள்ள இத்தகைய கசப்பான உண்மைகள் இருந்த போதிலும், றிஷாத் பதியூதீனும், அவரது கட்சியின் உயர்பீடமும் அதில் படிப்பினையைப் பெறவில்லை. கட்சி மற்றும் சமூக விசுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்காது மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவர்கள் என்ற தகுதியை மாத்திரம் கவனத்திற் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வாய்ப்பும், வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் பெற்றுள்ள பிரபல்யம் கட்சிக்கு வாக்குகளை சேர்க்கும் என்றே கணக்கிட்டுக் கொண்டார்கள். ஆனால், அத்தகையவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு விலகியதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ற உண்மையும் உள்ளது.

ஆதலால், அவர்கள் றிஷாத்; பதியூதீன் எனும் தனிநபரின் செல்வாக்கினாலும், அவர் செய்து கொடுத்த வசதிகளினாலும்இ வாய்ப்புக்களினாலுமே வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இன்று அக்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களக உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு கசப்பாக இருக்கின்ற உண்மையாகும். அவர்கள் தம்மை அரசாங்கத்தின் தரப்பினராகவும், றிஷாத் பதியூதீனுக்கும், தங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பது போலவும் நடந்து கொள்கின்றார்கள். அதனால்தான், றிஷாத் பதியூதீனைப் பற்றி பேசுவதற்கு முன் வராதுள்ளார்கள்.

இதே வேளை, றிஷாத் பதியூதீன் கைதும், அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மூலமாக உண்மை விசுவாசிகள், போலிகள் கட்சியின் நிலை, பாராளுமன்ற உறுப்பினர்களின் குட்டிக் கரணங்கள் என்று அத்தனை விடயங்களையும் கட்சியின் ஆதரவாளர்களும், தலைவர் றிஷாத் பதியூதீனுக்கும் வெகுவாகவே உணர்த்தி இருக்கின்றன. ஆதலால் றிஷாத் பதியூதீன் மீதான இன்றைய நெருடிக்கடிகளுக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு காரணமாகும்.

20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானத்தை நிறைவேற்றியதுடன், அதனை நடைமுறைப்படுத்தியமையும் றிஷாத் பதியூதீனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மற்றுமொரு காரணமாகும்.

அதிகார தரப்பினரோடு நெருக்கத்தையும், அவர்களின் தேவைக்காக கைகளை உயர்த்துவதற்கு சித்தமாகவும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது நடவடிக்கைகளை எடுக்கும் போது, அத்தகைய நடவடிக்கைகள் றிஷாத் பதியூதீன் மீது அதிகாரத் தரப்பினர் எத்தகைய கடுப்பைக் கொள்வார்கள் என்று சிந்திக்கத் தவறியமை உயர்பீட உறுப்பினர்களின் பலவீனமாகும்.

அத்துடன் தற்போதுள்ள அதிகார தரப்பினருக்கு 52 நாள் அரசியல் நெருக்கடியின் போது றிஷாத் பதியூதீன் எடுத்த முடிவு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. றிஷாத் பதியூதீன் தங்களை ஏமாற்றியதாகவே அவர்கள் எண்ணுகின்றாhகள். இந்த மனோநிலையும் அவரின் தற்போதைய நிலைமைக்கு ஒரு காரணமாகவும் உள்ளது.

அதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதலுக்கும் றிஷாத் பதியூதனுக்கும் தொடர்புகள் உண்டு என்ற குற்றச்சாட்டுக்களும், விசாரணைகளும் நடைபெற்றன. ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கiளை பஸ்ஸில் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தின் நிதியை தவறாகக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டும், கைதும் நடைபெற்றது.

பின்னர் அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் உள்ளதென்று புரிந்து கொண்டு அவர் இராஜதந்திரமாக செயற்பட்டிருக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு தங்களின் விசுவாசத்தைக் காட்டவும்இ கட்சிக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் உள்ளதென்று காட்டவும் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் றிஷாத் பதியூதீன் மீதான நெருக்கடிகளை மென்மேலும் அதிகரிக்கவே செய்திருக்கின்றன.

இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கட்சியின் தலைவர் சிறையில் உள்ள நிலையில் கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சியின் சார்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரையே தறகாலிக தலைவராக தெரிவு செய்ய வேண்டுமென்று பாராளுமன்ற

உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீனுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக சூழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

Related posts

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி !!

Fourudeen Ibransa
3 years ago

பாகிஸ்தான் இலங்கையை போன்றே பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது..!

Fourudeen Ibransa
2 years ago

திரும்பத் திரும்ப கொல்லப்படும் ‘அஷ்ரஃப்’

Fourudeen Ibransa
3 years ago