எரிபொருள் இறக்குமதி சம்பந்தமாக நேரடி பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது சம்பந்தமான இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் கூறினார்.
” எதிர்வரும் 10 ஆம் திகதியிலிருந்து எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியுடன், எமது ஜனாதிபதி ஜனாதிபதி பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவார். இதற்கான ஏற்பாடுகள் தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. ” எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியாவிலிருந்து எரிபொருளை விரைவில் கொள்வனவு செய்வது குறித்து இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருகின்றார் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 05 ஆம் திகதியிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு தடையின்றி எரிவாயுவை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.
அதேவேளை, எரிபொருள் கொள்வனவு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டு, இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சும் வெற்றியளிக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பும் அரசு, தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் தீரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த அரசால் நெருக்கடியை தீர்க்க முடியாதெனவும், மக்களை ஏமாற்றவே ஊடக சந்திப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இணைந்திருங்கள்