சாவித்திரி கண்ணன்
குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா?
உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள் கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் காவல் அதிகாரிகளிடம் மன்றாடிய போதும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து விட்டனர். நடந்த சம்பவங்களை விரிவாக விசாரித்து ஆராய்ந்த போது இது அதிகாரவர்க்கத்தின் ஆசியோடு நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என உறுதியானது.
இந்த விவகாரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், குடிமக்கள் தீர்ப்பாயம் ஆகிய்வை விசாரித்து அறிக்கையும் தந்துள்ளன! அந்த அறிக்கைகளும் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்தி உள்ளன! ஆயினும் மேற்படி விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அக்கறை காட்டி உண்மையை நிலை நாட்ட பெரிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை! இதற்கிடையே குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி புனிதராக சித்தரிக்கப்பட்டு, இந்தியப் பிரதமராகிவிட்டபடியால் அவரை எதிர்த்த எல்லா வழக்குகளும் தள்ளுபடியானதில், இறுதியாக குல்பர்க்கா சொசைட்டி வழக்கின் மேல்முறையீடும் தள்ளூபடியாகிவிட்டது!
இது தொடர்பாக அமித்ஷா தந்த ஒரு பேட்டியைத் தொடர்ந்து இந்த வழக்கில் உண்மையை நிலை நாட்ட உயிரை பணயம் வைத்து போராடிய தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad) கைதாகி உள்ளார்! அமித்ஷாவின் பேட்டியின் சில துளிகள் கீழே தரப்பட்டு உள்ளது.
”இது 19 ஆண்டு கால போராட்டம். இவ்வளவு பெரிய ஒரு தலைவர் ஒரு வார்த்தை கூட பேசாமல், சிவபெருமான் விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டது போல எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, போராடி வந்ததார். இன்று உண்மை வெளி வந்தவுடன் அவர் பொன் போல ஜொலிப்பதை பார்ப்பது பேரின்பமாகத்தானே இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்றம் எல்லா குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரம் குற்றச்சாட்டுகள் ஏன் சுமத்தப்பட்டன என்பதையும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது” என சூசகமாக தீஸ்தா செதல்வாத் கைதை உணர்த்திவாறு பேசினார் என்பது கவனத்திற்கு உரியதாகும்.
தீஸ்தா செதல்வாத் என்றால், அச்சமில்லாத ஆறு எனப் பொருளாம்! ஆம், உண்மையில் அச்சம் என்பதை அறியாத பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர் தான் தீஸ்தா! பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட தீஸ்தா எடுத்து வைத்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் சரியாக ஒத்துழைப்பு நல்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. வெறும் வாக்குவங்கி அரசியலோடு குஜராத் கலவரங்கள், அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட சுமார் 2000 இஸ்லாமியர்கள் விவகாரங்கள் முடிந்து விட்டன! ஆனால், தீஸ்தா செதல்வாட் என்ற இந்த இரும்புப் பெண்மணி மட்டும் இதில் நடந்த உண்மைகளை அம்பலபடுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு சட்டப்படியான தண்டனை வாங்கித் தருவதற்கு பல அவதூறுகள், வழக்குகளைச் சந்தித்து உயிரைப் பணயம் வைத்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்!
இவருடைய இடைவிடாத முயற்சியானால்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சரான மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட செல்வாக்கான சிலர் தண்டிக்கப்பட்டு உள்ளனர்! ஆனபோதிலும், எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என தீஸ்தா செதல்வாத்தால் அடையாளம் காட்டப்படும் மோடியை மட்டும் தண்டிக்க முடியவில்லை! ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு மோடி மீது குற்றமில்லை என நற்சான்று கொடுத்தது!
தீஸ்தா செதல்வாத் திரட்டித் தந்த தகவல்களை கொண்டு காங்கிரஸ் எம்.பி ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது. அதனால் அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதுவும் தள்ளுபடியானது. அப்போதும் தளராமல் மேல்முறையீடு செய்து மேலும்,மேலும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார்! தற்போது மேல்முறையீட்டு மனுவிலும் அவர் எதிர்பார்த்த நியாயம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் தீஸ்வா செதவாத் கைது செய்யப்பட்டு அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
2004-ல் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாகவும். ஆள் கடத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். 2010-ம் ஆண்டில் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்ததாக குற்றச்சாட்டு வைத்தனர். அப்போதும் கூட தீஸ்வா சொன்னார். ஆம், நான் புதைக்கட்ட உண்மைகளை தோண்டி எடுக்கிறேன் என்றார்! அடுத்து அதிகார வர்க்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் சாட்சியை பிறழ வைத்து பொய் சாட்சியம் சொல்ல வைத்து கார்னர் செய்தனர். அதையும் தகர்த்தார். அதன் பிறகு தன் நிறுவனத்திற்கு நிதி திரட்டியதில் மோசடி செய்தார் என புரளி கிளப்பி, விசாரித்தனர். கணக்கு, வழக்கு அனைத்தையும் அவர் துல்லியமாக எடுத்து பொதுவெளியில் வைத்தார். பிறகு வாயை மூடிக் கொண்டனர்.
எவ்வளவு முடக்கினாலும், தடுத்தாலும் தீஸ்தா செதல்வாத்தை அமைதியாக்க முடியவில்லை என்பதை பாஜக அரசு உணர்ந்துவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீஸ்தாவை கைதும் செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தீஸ்தா கைதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடந்திருக்க வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும். உண்மைக்கான குரல் ஒற்றையாக ஒலிப்பது தான் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினருக்கு சாதகமாக உள்ளது! காங்கிரஸ் எம்.பியின் கொலைக்கு காங்கிரஸ் கட்சியே அக்கறை செலுத்தவில்லை. நாம் ஏன் செலுத்த வேண்டும் என தீஸ்தா நினைத்திருந்தால் இந்த இருபது ஆண்டு கால போராட்டமே தேவை இருந்திருக்காது. ஜனநாயக சக்திகள் மெளனம் உடனடியாக களம் காண வேண்டும். தீஸ்தா தண்டிக்கப்பட்டால், இனி இங்கு அநீதிக்கு எதிரான குரலுக்கே அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.
இணைந்திருங்கள்