DOVE, NEXUS மற்றும் TIGGY உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளில் ரத்த புற்றுநோயை உருவாக்கும் பென்சீன் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் எப்எம்சிஜி நிறுவனமாக யூனிலீவர் உள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் DOVE, NEXUS, ROCKAHOLIC மற்றும் TIGGY உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

ட்ரை ஷாம்பு என்பது தண்ணீர் இல்லாமல் நேரடியாக தலைமுடியில் பயன்படுத்தப்படும் ஷாம்பு வகையாகும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற இந்த ஷாம்புகள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள வலிசியூர் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் DOVE, TIGGY உள்ளிட்ட யூனிலீவர் நிறுவனத்தின் ஷாம்புகளில் ரத்த புற்றுநோயை உருவாக்கும் பென்சீன் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏரோசோல் ட்ரை ஷாம்பு தொடர்பான 19 வகை பொருட்களையும் யூனிலீவர் நிறுவனம் அமெரிக்கச் சந்தையிலிருந்து மட்டும் திரும்பப் பெற்றுள்ளது. இந்தியாவில் யூனிலீவர் ஷாம்புகள் விற்பனைக்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.