அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணியளவில் மருதானையில் இருந்து ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த பின்னர், அங்கு கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, 43 ஆம் படையணி உட்பட 20 இற்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

100 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் பேரணியிலும், கூட்டத்திலும் இணையவுள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்க அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவும் ஆதரவு வழங்கவில்லை.

துரோகிகள்

” நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன தெரிவித்தார்.

நாடு இருளில் இருந்து ஒளியை நோக்கி நகரும்வேளையில் நாட்டை மீண்டும் இருளை நோக்கி தள்ளும் நடடிக்கையில் எதிரணிகள் இறங்கக்கூடாது. நாடு மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கினால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு கூற வேண்டும் – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதேவேளை, கொழும்பில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.சனத்