தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் மழை பெய்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது புயல் சின்னமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி இன்றோ அல்லது நாளையோ ஆய்வு மையத்தால் கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, நாளை முதல் வருகிற 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிலும் குறிப்பாக நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், 11-ந்தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், களியல் 6 செ.மீ., மன்னார்குடி 5 செ.மீ., சிவகங்கை, திருக்குவளை, சுருளக்கோடு, மயிலாடுதுறை, பெருஞ்சாணி அணை, கமுதி, புத்தன் அணை தலா 4 செ.மீ., வைப்பார், திண்டுக்கல், திருப்புவனம், பாண்டவையார், ஒட்டன்சத்திரம், மஞ்சளாறு, தனிமங்கலம், குன்னூர், திருவிடைமருதூர், வேடசந்தூர், கீழ்கோதையார், பவானிசாகர், சோலையார், புவனகிரி, கோடியக்கரை, பெரியார், திருப்பூண்டி, பாலவீதி, மணல்மேடு, வெம்பக்கோட்டை, குழித்துறை, நகுடி, கெத்தை, மேலூர், பழனி, திருவையாறு, சின்னக்கல்லாறு தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.