தொடரும் யுக்ரைன் ரஷ்ய போர் காரணமாக உலகப் பொருளாதார நிலை மேலும் மேலும் சிக்கல் நிலைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாடுகளுக்கிடையேயான முரண்நிலைகள் மூன்றாம் உலகப்போர் ஒன்றை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சநிலை தோற்றம் பெற்று வருகிறது. ஜப்பான் தனது பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு மேலும் 52 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியிருக்கிறது. வடகொரியா-தென் கொரியா முரண்நிலை எந்த நேரத்திலும் போராக மாறும் நிலை காணப்படுகிறது.தாய்வான்-சீன தகராறு போர் ஒத்திகை என்ற நிலைக்கு வந்துள்ளது.கொசோவோ நாட்டு எல்லையில் சேர்பிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக நாடுகளுக்கு இடையிலான முரண் நிலைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன.மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் அபாயம் சீனாவை ஆட்டிப்படைக்கிறது. இது ஏனைய நாடுகளிலும் தாக்கத்தை செலுத்தும் ஏது நிலை இருப்பதால் நாடுகள் தற்பாதுகாப்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பான அனர்த்தங்களினால் ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள் பெரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக வட அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றன.வறட்சி காரணமாக ஆபிரிக்க கண்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.இலங்கை போன்று உலகில் 54 நாடுகள் வங்குரோத்து நிலையை நோக்கி நகர்வதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் தேசிய இன பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவுற்றுள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு முன்பாக அதாவது சுதந்திர தினத்துக்கு முன்பாக தமிழர் பிரச்சினை தொடர்பான விடயத்தில் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க ஒரு கால வரையறையும் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் தமிழரசு கட்சி தலைமையில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்படி கலந்துரையாடலில் எப்படி முகம் கொடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருவதுடன், எதிர்காலத்தில் நடைபெறப்போகும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் அவசியத்தையும் விவாதித்து வருகின்றனர்.
குறிப்பாக விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எத்தகைய அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது இந்த பேச்சுக்களில் இணைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.இது ஒருபுறம் இருக்க சில தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தீர்வை வழங்க என்ன தகமை இருக்கிறது. அவர் தென்னிலங்கை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றிடாத தலைவர் என்றும் எனவே இவரது அழைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அறிக்கைகளை ஊடக அறிவிப்புகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தமது அரசியல் இருப்புக்களை தக்க வைப்பதற்காக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் சில காட்சிப்படுத்தல் போராட்டங்களையும் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.மிகச் சொற்ப மக்களை திரட்டி இப்போராட்டங்களை நடத்தி ஒன்றிணைந்த போராட்ட செயற்பாடுகளுக்கு இடம் வழங்காத நிலையை தொடர்ந்து பேணி வருவதுடன், சமஷ்டி முறையிலான தீர்வைத் தவிர வேறு எந்த விதமான முன்னெடுப்புகளும் தமிழ் மக்களுக்கு முடிவை பெற்று தராது என்பது இவர்களது வாதமாக இருந்து வருகின்றது.மேலும் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கு கௌரவத்தை வழங்கி அதில் பங்கேற்க தயாராகி வரும் தமிழ் தலைமைகள் தீர்வு தொடர்பான விடயத்தில் இந்திய மத்தியஸ்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு எதிரான தரப்பினர் இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்றும் தமிழ் தேசத்தின் விடுதலையை இவர்கள் காட்டி கொடுத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் இவர்கள் மீதும் தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.
தென்னிலங்கை அரசியல் களத்தை பொறுத்தவரையில் பேரினவாத தள அரசியல் மிகவும் பலவீன நிலைக்கு சென்றுள்ளது.தமிழர் தேசத்திற்கு எத்தகைய தீர்வையும் வழங்கக்கூடாது என ரணில் விக்ரமசிங்கவிற்கு எச்சரிக்கை விடும் எல்லே குணவன்ச தேரரின் எச்சரிக்கை சுருதி குறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது.மறுபக்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் ஊழல் மோசடி தொடர்பில் அதீத கவனத்தை குவித்து வருவதுடன், தமிழ் தேசிய பிரச்சனை தீர்வு தொடர்பான விடயத்தில் அவர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.அறகளைய போராட்ட காலத்திலும் இத்தகைய தரப்பினர் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் அடக்கி வாசித்து வந்தனர்.அண்மையில் பெவ்ரல் அமைப்பினால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பேராசிரியர் ஜாமினி உயன்கொட கருத்து தெரிவிக்கையில்; எதிர்வரும் தேர்தல்களில் ஊழல்களுக்கு எதிரான அணியினர் ஒரு தரப்பாக ஒன்றிணைந்து போட்டியிட்டு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டுமென கருத்து தெரிவித்திருந்தார்.
இவர்களின் கருத்துக்களில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கருத்து நிலைகள் மருந்துக்கு கூட இல்லாத நிலை தொடர்கிறது.மேலும் ரணில் விக்ரமசிங்க மக்கள் அங்கீகாரம் அற்ற தலைவர் என்ற நிலையில் இருப்பதால் அவர் எடுக்க இருக்கும் செயற்பாடுகள் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற கருத்தியல் சில தமிழ் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் ஆழமாக வேரூன்றிய நிலை காணப்படுகிறது.ஆனால் இங்கே இவர்கள் பார்க்க தவறும் அம்சம் என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் நாடு எதிர்நோக்கும் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க இதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்பதையும் இவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலை பெரும்பான்மை தென்னிலங்கை மக்களிடம் தோற்றம் பெற்றுள்ளது என்பதையும் இதன் காரணமாகவே இரண்டாவது அறகளைய போராட்ட முயற்சி தோல்வியில் முடிந்தவுடன் மீண்டும் ஒரு வெகுஜன எழுச்சி தென்னிலங்கையில் சாத்தியப்படாத நிலை காணப்படுகிறது.
எனவே தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான விடயத்தில் தென்னிலங்கை மக்களின் ஆதரவு பின்புலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதன் காரணமாகவே அவர் இந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றார்.நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவர் எடுத்து வரும் துரித செயற்பாடுகள் மக்கள் ஆதரவு இருந்துவருவதால் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விடயத்திலும் இந்த நிலை தொடர வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
இன்றைய சூழ்நிலையில் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு நிலை என்ற விடயம் சாத்தியப்படாது போனாலும் மாகாண சபைகளுக்கான அதிகாரம் மற்றும் தமிழ் மக்கள் எதிர் நோக்கி வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, ராணுவ கையிறுப்பில் இருக்கும் நிலங்களை விடுவித்தல் போன்ற தளங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் அரச கட்டமைப்புகள் தமிழர் தேசத்தில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளின் வேகத்தையும் இதன் மூலம் குறைக்க முடியும்.
எனவே இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் அழுத்தங்கள் தமிழ் தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் இருந்து வருவதால் நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டின் தமிழ் தேசிய பிரச்சனையிலும் ஒரு இணக்கத்தை நோக்கிய நிலைக்கு அரசாங்கம் செல்ல வேண்டும் என்ற நிலை உறுதி பெற்று வருகிறது.
இலங்கையை பொறுத்தவரையில் அண்மைய வரலாற்றில் தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஆர்வத்தை காட்டி வருகிறார்.தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் இருந்து நல்லாட்சி காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயல்பாடுகள் வரையான காலப்பகுதி என பல்வேறு சூழ்நிலைகளில் தமிழர் தரப்புக்கு ஒரு தீர்வை வழங்கும் நிலையில் அவர் தொடர்ந்தும் இருந்து வருகிறார். எனவே இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் எத்தகைய இழப்புகளும் தமிழர் தேசத்துக்கு ஏற்படாது. மாறாக எமக்கான விடுதலை நோக்கிய நகர்விற்கு வலிமை சேர்க்கும் நிலையே நிச்சயம் உருவாகும்.
இணைந்திருங்கள்