யாழ்ப்பாணம் (Jaffna) , சில்லாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (03) மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூவரசங்குளம் காவல்துறை பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 26 ஆம் திகதி அன்று கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த 36 வயதுடைய மைந்தன் இருதயராஜா எனும் யாழ் சில்லாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டின் பின்னணி என்ன..!

மேலதிக விசாரணை

இது தொடர்பான விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வந்த நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைவாக விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மறைந்திருந்த நிலையில் சந்தேகநபரான வவுனியா, கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் படி, மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.