ஸ்மார்ட் வாட்ச் மூலம் கொரோனாவை ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்துவிடலாம்; ஆய்வு முடிவுகள் சொல்கிறது!

ரேபிட் டெஸ்ட் மற்றும் பி.சி.ஆர் கருவிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையியே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிந்துவிடலாம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய பிசிஆர் கிட், ரேபிட் கிட் ஆகிய பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றை ஆப்பிள், பிட்பிட் ( Fitbit ) மற்றும் கார்பின் ( Garbin ) போன்ற ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவும் கண்டறியலாம் என்று அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக மவுண்ட் சினாய் மருத்துவமனையில் பணிபுரியும் 100 சுகாதார பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் அணிவிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பங்கேற்பாளர்களின் சுகாதாரத் தரவுகளை ஆய்வாளர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். அந்தத் தரவுகளின் அடிப்படையில், பங்கேற்பாளர்களின் இதயத் துடிப்பு (எச்.ஆர்.வி) மாற்றங்களை வரைபடமாக்கினர்.

மேலும், காய்ச்சல், சளி மற்றும் உடல் பலவீனம் அறிகுறிகளையும் கண்காணித்தனர்.இதன் மூலம், மற்ற கருவிகளைக் கொண்டு கொரோனா நோய்த் தொற்றை உறுதி செய்வதற்கு முன்னரே, நோய்த் தொற்றின் தாக்கம் ஸ்மார்ட் வாட்ச்சால் கண்டறியப்பட்டது. மருத்துவ இணைய ஆராய்ச்சி இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் ’இந்த ஆய்வு முடிவு டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகிறது.

நோய்வாய்ப்பட்ட நபர்கள் நோய் தொற்று பற்றி அறிவதற்கு முன்பே, ஸ்ட்மார்ட் வாட்ச் மூலம் நோயை அடையாளம் காண்பதென்பது கோவிட் 19 வைரஸ் தொடர்பான போரில் ஒரு முன்னேற்ற செய்தி” என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.