ப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கமும், இரண்டு வெண்கல பதக்கங்களும் வென்றிருந்த நிலையில், தற்போது ஆண்கள் ஹொக்கி அணி ஜெர்மனியுடனான போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி மேலும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இதன் மூலம் பதக்க எண்ணிக்கை தற்போது 4-ஆக உயர்ந்து, பதக்கப் பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது.

ஒருபுறம் இந்திய ஆண்கள் ஹொக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றிவாகை சூடியிருக்கும் நிலையில், மறுபுறம் நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் ஹொக்கி அணி ஆர்ஜென்ரீனா அணியுடனான அரையிறுதிப் போட்டியில் கடைசி நொடி வரையிலும் போராடி 1-2 என்று கணக்கில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஆர்ஜென்ரீனா தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இருப்பினும், மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் இந்திய மகளிர் ஹொக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

ஆர்ஜென்ரீனா உடனான நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய அணி கடைசி 15 நிமிடங்களில் வெற்றி வாய்ப்பை அர்ஜென்டினாவிடம் பறிகொடுத்தது. இந்திய மகளிர் ஹொக்கி அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது குறித்து இந்தியர்கள் அனைவரும் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், சர்வதேச ஹொக்கி போட்டிகளில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த முதல் ஹொக்கி வீராங்கனை என்ற சாதனையை இந்த ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்தி, மிகச் சிறப்பாக விளையாடிவரும் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்கு முன்பு சில நபர்கள் சாதியைச் சுட்டிக்காட்டி இந்திய அணியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மகளிர் ஹொக்கி அணி நேற்று ஆர்ஜென்ரீனாவிடம் போராடி வீழ்ந்த, அடுத்த சில நிமிடங்களில் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்திலுள்ள ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் சென்றிருக்கின்றனர். வீட்டில் இந்திய அணியின் தோல்வியால் வந்தனாவின் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திலிருந்த நேரத்தில், இருவரும் வந்தனாவின் வீட்டுக்கு முன்பாகப் பட்டாசுகளை வெடித்து, கிண்டல் செய்யும்விதமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடியிருக்கின்றனர்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த வந்தனாவின் குடும்பத்தினரைச் சாதியைக் சுட்டிக்காட்டி அவதூறாகவும் பேசியிருக்கின்றனர். தொடர்ந்து, அந்த இருவரும் வந்தனாவின் குடும்பத்தினரை நோக்கி, “இந்திய மகளிர் ஹொக்கி அணியில் ஏராளமான பட்டியலின வீராங்கனைகள் இருக்கின்றனர். அதனால்தான், இந்திய அணி போட்டியில் தோற்றுவிட்டது” என்று கத்தி கூச்சலிட்டுச் சிரித்திருக்கின்றனர். அதைக் கேட்டு மனமுடைந்துபோன வந்தனாவின் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த ரோஷனாபாத் போலீஸார், வீராங்கனை வந்தனாவின் வீட்டுக்கு முன்பு சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக கோஷமிட்ட நபர்களில் ஒருவரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, இது குறித்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வந்தனாவின் சகோதரர் சேகர் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “நாங்கள் அனைவரும் இந்திய அணி தோல்வியைத் தழுவிவிட்டதை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, எங்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டு மாற்றுச் சமூகத்தை சேர்ந்த நபர்கள் எங்கள் வீட்டுக்கு முன்பாக பட்டாசு வெடித்து, எங்களையும் இந்திய மகளிர் ஹொக்கி அணியையும் அவதூறாகப் பேசினார்கள். இந்திய மகளிர் ஹொக்கி அணியில் ஏராளமான பட்டியலினப் பெண்கள் இருப்பதால்தான் அணி தோல்வியடைந்துவிட்டதாகவும், ஹொக்கி மட்டுமன்றி மற்ற விளையாட்டுகளிலும் பட்டியலின வீரர்கள் நிறைந்து காணப்படுவதாகவும் கத்திக் கூச்சலிட்டனர்” என்று மிகவும் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்தியாவின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில், உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கப் போராடிக்கொண்டிருக்கும் வீராங்கனைகள் மீது சாதியைக் காரணம் காட்டி அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் விஷமிகளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!