இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது.
இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பேசினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் ராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் என அவர் கூறினார்.
அவசரகால விதிமுறையின் சிவில் செயற்பாடுகளில் ராணுவத்தின் பங்களிப்பு மேலும் விரிவாகும் என்றும் சமூக, பொருளாதார ஆட்சியில் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் ராணுவ மயமாக்கலின் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ராணுவ செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை, மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் குறிப்பிட்டார். பின்னர் அவர் தமது கவலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டார்.
அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நினைவேந்தல்களை அனுசரிக்கும் நபர்களை, அரசாங்கம் தமது அதிகாரங்களை பயன்படுத்தி கைது செய்வதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சிவில் சமூக குழுக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் சிவில் சமூகக் கருத்தாடலுக்கான வழிகள், பரந்த கலந்துரையாடல்கள் ஊடாக திறக்கப்பட வேண்டும் என ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வலியுறுத்தினார்
துரதிருஷ்டவசமாக மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல்கள், நீதித்துறை துன்புறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்கள், கல்வியாளர்கள், வைத்திய நிபுணர்கள், மத தலைவர்களின் அரசாங்கம் மீதான விமர்சனங்களுக்கு வரையறைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மிக நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை இலங்கை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கை
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மத தலைவர்கள் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த நிலையில், சட்டத்தரணி ஹிஜாஷ் ஹிஸ்புல்லா, நம்பிக்கையில்லா சாட்சியங்கள் இல்லாது, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக 16 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் குறித்தும் மிச்செல் பெச்சலட் கவலை வெளியிட்டார்.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என சட்ட மாஅதிபர் அறிவித்தது, 2011ஆம் ஆண்டு அரசியல்வாதியின் கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்ற செயல்பாடுகள், நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலட் தெரிவித்தார்.
பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மேலும் உயிரிழப்பது, போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான தொடர் சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து தான் கவலை அடைவதாகவும் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் கூறுகின்றார்.
இலங்கை அரசு எதிர்வினை
மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மிச்செல் பெச்சலட்டின் குற்றச்சாட்டுக்களுக்கு இன்று பதிலளித்தார்.
தீர்மானம் 46/1 ஆல் நிறுவப்பட்ட எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை தாங்கள் நிராகரிக்கும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீர்மானம் 30/1 இனால் தாங்கள் அனுபவித்தபடி இது தமது சமூகத்தைத் துருவப்படுத்திவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன், அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அவை அவசரமாகத் தேவைப்படும்போது, இந்த முயற்சியில் செலவிடப்பட்ட வளங்கள் தேவையற்றவை என அவர் கூறுகின்றார்;.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து, அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களைப் பாதுகாப்பதிலும் எப்போதும் போல தாம் விழிப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் நாளாந்த சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இதன்போது பட்டியலிட்டு அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
01. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அதன் முக்கிய செயற்பாடாக, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்கின்றது.
02. இழப்பீட்டு அலுவலகம் இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை செயலாக்கியுள்ளது.
03. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அதன் 8 அம்ச செயற்றிட்டத்தைத் தொடர்கின்றது.
04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது.
05. நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழுவொன்று சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
06. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டு வரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், இதுபோன்ற வழக்குகளை விரைவாக சமாளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விரைந்து தீர்ப்பதும் நடைபெற்று வருகின்றது.
07. பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.
08. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு, நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப் பராமரிக்கின்றோம என்று பீரிஸ் கூறியுள்ளார்.
இணைந்திருங்கள்