யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் New Fortress Energy நிறுவனத்திற்கு நள்ளிரவில் விற்பனை செய்து நாட்டு மக்களுக்கு தேர்தலில் வழங்கிய தேசப்பற்றாளர்கள் வாக்குறுதிகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த காட்டிக்கொடுப்பு நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய தரப்பினருடனும் இணைந்து நாட்டு மக்களை அணிதிரட்டும் என அவர் கூறியுள்ளார்.
zoom தொழிநுட்பத்தில் இரவு நேரத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் பங்குகளை வௌிநாட்டு நிறுவனத்திற்கு விற்க அமைச்சர்கள் இயங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2035ம் ஆண்டு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் முழுமையாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமாகவுள்ள நிலையில் அவற்றின் முழுமையான பங்குகளை விற்பனை செய்திருப்பது அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயல் என அவர் கூறியுள்ளார்.
விலை மனு கோராமல் குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு கேஸ் விநியோகம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் நாட்டுக்குத் தேவையான 50% மின்சாரம் வௌிநாட்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு எதிராக எவரும் குரல் எழுப்பவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்