இலங்கை அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பாடகியான யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட காணியின் பெறுமதி வெளியாகி உள்ளது.

பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன வீதியில் அமைந்துள்ள குறித்த காணியின் பெறுமதி 4 கோடி ரூபாய் என அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் காணி பதிவு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை யோசனைக்கமைய அவருக்கு 9.68 பேர்ச் காணி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணி வீரர்களுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட காணிக்கு அருகாமையில் ஹொயானிக்கான காணி இருப்பதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தனது நாட்டின் நற்பெயரை அங்கீகரிப்பதற்காகவே இந்த காணியை அவருக்கு வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.