நாகரிகச் சமூகத்தின் அவலமாய் உலகம் முழுவதும் இன்றளவும் சித்திரவதை பரவலாய்க் காணப்படுகிறது. கால மாற்றத்திற்கேற்ப அவை குடும்ப சித்திரவதை, சமூக சித்திரவதை, அரசதிகார சித்திரவதை என பல்வேறு வடிவங்களில் பரிமாணம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சித்திரவதையை மட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாய்க் கருதப்படுகிறது. எனவே சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான பாதுகாப்பையும் ஆதரவையும் கட்டியெழுப்ப வேண்டிய கடமை குடிமைச் சமூகத்திற்கு உள்ளது.

சித்திரவதை என்பதன் வரையறை:

சித்திரவதை என்பது ஒருவர் சக மனிதர் மீது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கடுமையான வலியையோ அல்லது துன்பத்தையோ உள்நோக்கத்துடன் திட்டமிட்டு, குரூரமாக ஏற்படுத்துவது, மனிதத்தன்மையற்ற, இழிவான முறையில் நடத்துவது அல்லது தண்டிப்பது ஆகும்.

இங்கே குடிமைச்சமூகத்தின் அடிமனதை அசைப்பது யாதெனில் நாகரிகச் சமூக மனிதனே சகமனிதன் மீது இத்தகைய சித்திரவதையில் ஈடுபடுகிறான் என்பதே. இதற்குக் காரணம் என்ன? தனி மனித எதேச்சதிகாரப் போக்கும், சமூக ஆதிக்க மனநிலையும், அரசதிகாரத்தின் சர்வாதிகாரப் போக்கும் ஆகும். இவர்தம் ஆதிக்கத்தின் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயச் சூழலில் பெரும்பான்மையான சித்திரவதைகள் நடைபெறுகின்றன.

வரலாற்றில் வதைகள்:

கற்காலந் தொட்டு கணினி காலம் வரை சித்திரவதை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஊர்க்குடும்ப முறை தொடங்கிய காலந் தொட்டே குற்றச் செயல்களுக்கேற்றவாறு அளிக்கப்பட தண்டனைகள் உடலை வருத்தும் சித்திரவதை சார்ந்தே இருந்துள்ளன. சாட்டையால் முதுகில் அடித்தல், அசைய கட்டிவைத்து சவுக்கால் அடித்தல், குனியவைத்து முதுகில் கல்லைச் சுமக்கும்படிச் செய்தல், நீண்டநேரம் வெயிலில் நிற்கும்படிச் செய்தல், காய்ச்சிய ஈயம், எண்ணெய் ஆகியனவற்றைக் காதில் ஊற்றுதல், கல்லைக் கட்டி நீரில் போடுதல், நெருப்பில் போடுதல், உடல் உறுப்பைத் துண்டித்தல், உயிரைப் பறித்தல், தனிமைச் சிறையில் அடைத்தல், நாடு கடத்துதல், என்பன பரவலாக அக்காலகட்டத்தில் அறியப்பட்டவை ஆகும். இவை தவிர பல்வேறு சித்திரவதை முறைகள் கால மாற்றத்திற்கேற்ப வழக்கில் உள்ளன.

உலகையே நடுங்க வைத்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் 1941 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் 11 பில்லியன் பேர் வதைக் கொட்டடியிலும் , சாவுக் கொட்டடியிலும் கொல்லப்பட்டது வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் காணப்படுகிறது. இவர்களுள் பெரும்பான்மையாக யூதர்கள் உட்பட ஜிப்சிகள், சோவியத் ஒன்றிய போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமய கருத்துடையோர் அடங்குவர்.

உலக வல்லரசாய் மார்தட்டிய அமெரிக்காவை நிலைகுலைய வைத்த உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலைத் (2001செப்.11 ) தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகள் என்ற பெயரில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய சித்திரவதை உலகையே உறைய வைத்தது. ‘‘நமது சமகால வரலாற்றில் மிக மோசமான சித்திரவதைக் கூடம் இதுதான்’’ என அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு இந்த சிறையைக் குறிப்பிடுகிறது. கேட்கும்போதே ரத்தம் உறையச் செய்யும் முறைகள்…

பகல் பொழுதில் ஏதும் செய்யாமல் இரவு உறைய வைக்கும் குளிரில் தூங்கச் செல்லும் போது உடல் மீது சில்லென தண்ணீர் பீய்ச்சியடிப்பது, போதை மருந்தை ஊசி மூலம் செலுத்தி உளற விடுவது,

கண்களில் பெப்பர் ஸ்பிரே அடிப்பது, முள் கம்பிகளால் அடிப்பது, சிகரெட்டால் சூடு வைப்பது, தலையை கான்க்ரீட் தூணில் மோத வைப்பது ஒரே நேரத்தில் நான்கைந்து பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி சிறுநீர் முட்ட வைத்து கழிப்பறை செல்ல விடாமல் ஆடையிலேயே சிறுநீர் கழிக்க வைப்பது , நிர்வாணப்படுத்தி, பெண்களின் மாதவிடாய் இரத்தத்தை உடலில் பூசுவது என இந்த வதையை வரலாறு பேசுகிறது.

கருப்பு உயிர் பொருட்டாகும் என்ற முழக்கம் உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் 2020 மே மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் ஒரு வெள்ளையின காவலர் காலை வைத்து பலமாக அழுத்திய போது மூச்சு விட முடியவில்லை என்று கதறி மூச்சுத் திணறியே அவர் உயிர் பிரிகிறது. நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்க நாட்டில் பொதுவெளியில் நடந்தேறிய சித்திரவதை.

இதே போன்று 2020 ஜூன் 22 தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் காவல் மரணம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார்(No:7656/2017/C2) கொடுத்ததற்காக ரிசாத் ராஜ் (த/பெ செல்வம், சூசையப்பர் கிராமம், கெ.கல்லுப்பட்டி, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம்) என்ற இளைஞரை அண்மையில் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து 3.4.2022 முதல் 5.4.2022 வரை உடல் முழுவதும் கம்பாலும். இரும்புக் கம்பியாலும் அடித்து சித்திரவதை செய்தது மனித உரிமைக் காப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு வரலாறு நெடுகிலும் வன்முறையின் சுழற்சியாய் சித்திரவதை காணப்படுகிறது. இதை மட்டுப்படுத்த இதுகாறும் எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?

சித்திரவதைக்குத் தடை:

சித்திரவதை என்பது மனிதர்களால் சக மனிதர்கள் மீது இழைக்கப்படும் மிக இழிவான, கேடான செயல்களில் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபை தொடக்க காலத்தில் இருந்தே கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா மேலும்குறிப்பிட்டுள்ளதாவது:

“சித்திரவதை உள்ளார்ந்த மனித மாண்பை மறுக்கிறது. அது பாதிப்புற்றோரின் தனி மனித ஆளுமையை சிதைக்கிறது.“

சித்திரவதை என்பது சர்வதேச சட்டப்படி குற்றம் ஆகும். பொருத்தமான சர்வதேச சட்ட விதிகளின் படி சித்திரவதை முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

எந்தச் சூழலிலும் சித்திரவதையை நியாயப்படுத்த முடியாது. சித்திரவதை மீதான தடை என்பது வழக்கமான சர்வதேச உடன்படிக்கைகளின் படி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாடு சித்திரவதையை தடைசெய்திருக்கிறதா என்று பாராமல், சர்வதேச சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனோடும் இத்தடை இயல்பாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை எதார்த்தமாக அறிய வேண்டும். தனி மனிதர்களால் இழைக்கப்பெறும் சித்திரவதையைப் போன்று அரசதிகாரத்தால் இழைக்கப்பெறும் சித்திரவதையும் மனித குலத்திற்கு எதிரான குற்றமே.

ஐ.நா ஆதரவு நாள்:

சித்திரவதை, பிற கொடூரமான, துளி கூட மனிதாபிமானம் இல்லாத அல்லது இழிவுபடுத்தும் செயற்பாடுகள் அல்லது தண்டனைகள் என்பனவற்றிற்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையின் பெருநோக்கான சித்திரவதையை முற்றிலுமாக ஒழித்து திறம்பட செயற்பட 1997ஆம் ஆண்டு டிசம்பர் 12, அன்று ஐ.நா பொதுச் சபை, 52/149 தீர்மானத்தின் மூலம், “சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஆதரவு நாள்- ஜூன் 26” என்று பிரகடனம் செய்தது.

உலகம் முழுவதும் சித்திரவதையால் ஏற்கெனவே பாதிப்புற்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், இத்துடன் இன்றும் சித்திரவதையால் பாதிக்கப்படுவோர்க்கும் ஆதரவாக, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள், குடிமைச் சமூகம், தனி மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் நாளாக ஜூன் 26 ஐ ஐக்கிய நாட்டவை அடையாளப்படுத்துகிறது.

“சித்திரவதை செய்தவர்கள் அந்தக் குற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு போதும் அனுமதியோம்! சித்திரவதையை செயல்படுத்தும் கட்டமைப்பை அகற்றுவோம் அல்லது மாற்றுவோம்! என்று ஐ.நா.பொது செயலர் ஆன்டனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார்.

சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஆதரவு நாள்- ஜூன் 26”இன் கருப்பொருள் யாதெனில் “சித்திரவதை என்பது மனித குலத்திற்கே எதிரான குற்றம்” என்பதாகும். இங்கிருந்து தான் இந்த நாளுக்குரிய அவசியம் உணரப்படுகின்றது.

சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும், சித்திரவதை பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்ற கருத்தோட்டம் பரவலாக்கம் பெற்று வரும் நிலையில் சித்திரவதைக்கான மூல காரணத்தை அறிய வேண்டியது அவசியம் ஆகும். சித்திரவதை தொடர்பான வரலாற்று சேதிகளை கூர்ந்து நோக்கினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவோர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெவ்வேறு ஆட்களாக உள்ளனர். ஆனால் சித்திரவதையில் ஈடுபட்டோர் வெவ்வேறு தரப்பினராக, கூட்டாக, தனி ஆளாக, அமைப்பாக, சாதியாக, மதமாக, அரசதிகாரமாக இனங்காணப்படுகிறார்கள். இதில் ஆக்கப்பூர்வமாக நாம் என்ன செய்யப்போகிறோம்? சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கு இழப்பீடு, மறுவாழ்வு என சமரசமின்றி செயற்படும் அதே நேரத்தில் குற்றம் இழைத்தவர்க்கு வெறுமனே தண்டனை வாங்கிக் கொடுப்பதில் கவனஞ் செலுத்துகிறோம். இதையுந் தாண்டி சித்திரவதையில் ஈடுபட்டவர்கள் இனிமேல் சித்திரவதை மீதான சிந்தனையற்றவர்களாக மாற்றக்கூடிய செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். இதுவே சித்திரவதைகளை மட்டுப்படுத்தும். இழைத்த குற்றத்திற்கு தண்டனை என்ற மேம்போக்கான பொதுப் புத்தியில் இருந்து விலகி பாதிப்பை ஏற்படுத்தியோர் மனந்திருந்துவதற்கான வழிமுறைகள் செயலாக்கம் பெறவேண்டும். இத்தகைய எண்ண ஓட்டங்களை கருத்திற்கொண்டு சித்திரவதைக்கெதிரான பிரகடனங்களும், சட்டங்களும் மறுசீராய்வு செய்யப்பெற வேண்டும். சித்திரவதையற்ற உலகு காண இன்னும் சிந்திப்போம்! நடைமுறை சாத்தியங்களுடன்….